தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகக் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்ற இவரின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் 'நானே வருவேன்'.
இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். அத்தோடு கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறது.
இப்படத்திற்கு மென்மேலும் வலு சேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். பலத்த எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் வெளியான தனுஷின் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
இப்படத்தில் தனுஷ் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். ஒருவர் பிரபு, மற்றவர் கதிர். இதில் கதிர் வழக்கமான சாதாரணமான பிள்ளைகள் போல் இல்லாமல் சிறு வயதில் இருந்தே வித்தியாசமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவர்களின் பெற்றோர்கள் கதிரை ஒரு கோவிலில் விட்டு, பிரபுவை மட்டும் தமது பிள்ளை போன்று வளர்கிறார்கள்.
பல வருடங்கள் கழித்து பிரபு அழகான மனைவி, அன்பான மகள் என சந்தோஷமாக குடும்பத்துடன் வாழ்கிறார். அப்போது தனுஷ் மகள் தனியாக இருந்து பேசுகிறார், சில நாட்களில் மகளின் மீது சில சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. ஒரு கட்டத்தில் தன் மகள் மீது ஆவி ஒன்று தங்கி இருப்பதை கண்டுப்பிடிக்கிறார் தனுஷ்.
அந்த ஆவியிடம் பேச முயற்சிக்கும் போது, அந்த ஆவியானது ஒரு கோரிக்கையை முன்வைக்கிறது. அந்த வகையில் "நீ அதை செய்தால் தான் உன் மகளை விட்டு போவேன்" என்று சொல்ல, தனுஷும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அதை செய்ய துணிகிறார், அந்த ஆவி சொன்னதை தனுஷ் செய்தாரா, தன் மகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை.
மேலும் தனுஷ் இரட்டை வேடம் என்பதால் பிரபுவாக சாந்தமாக தன் மகளுக்கு ஆவி பிடித்து அவர் கஷ்டப்படும் போது இவர் தவிக்கும் தவிப்பு நமக்கும் பரிதாபத்தை கொண்டு வருகிறது.
மறுப்பக்கம் கதிர் என்ற வேடத்தை எடுத்து பார்த்தால் அவர் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். இவ்வாறாக படத்தில் பெரிய கேரக்டர் என்று எதுவுமில்லை, தனுஷை நம்பியே முழுப்படமும் செல்கிறது. அதுமட்டுமல்லாது தனுஷ் மகளாக நடித்தவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
படத்தின் முதல் பாதி ஏதோ கான்ஜுரிங் படம் போல் மிரட்டும் வகையில் விறுவிறுப்பாக அமைந்திருக்கின்றது. அதுவும் குறிப்பாக இடைவேளை காட்சியானது சீட்டின் நுனிக்கு பார்ப்போரை வரவைக்கிறது.
இரண்டாம் பாதியானது கதையாக நகர்வதால் கொஞ்சம் திரைக்கதை மெதுவாக தான் செல்கிறது. அதாவது முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை. அதே நேரத்துல் வில்லன் தனுஷ் தான் தன்னுடைய அசுர நடிப்பால் இரண்டாம் பாதியை நகர்த்தி செல்கின்றார்.
இவ்வாறாக படம் முழுவதும் தனுஷை மையமாக கொண்டு நகர்ந்து சென்றாலும் படத்தின் மிகப்பெரிய பலம் என்னவெனில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் பின்னணி இசை தான்.
இவ்வாறாக படமானது பிளஸ் ஆன பல அம்சங்களை கொண்டிருந்தாலும், இயக்குர் கதையை கொண்டு சென்ற விதத்தில் கவனம் செலுத்தி இரண்டாம் பாதியில் இன்னும் விறுவிறுப்பாக கதை அமைந்திருந்திருந்தால் படம் ரொம்ப அற்புதமாக இருந்திருக்கும்.
Listen News!