தமிழ் சினிமாவில் 'கல்லுக்குள் ஈரம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. இப்படத்தினைத் தொடர்ந்து 'ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, இளஞ்ஜோடிகள், மன்னன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிகளவிலான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜயசாந்தி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல விடயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ''நான் அனைத்து மொழிகளிலும் சுமார் 180 படங்களில் நடித்து இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும்" எனக் கூறியிருக்கின்றார்.
அத்தோடு "சினிமாவில் நான் வாங்கிய முதல் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய். ஆனால் படம் முடிந்ததும் என்னை ஏமாற்றி ரூ.3 ஆயிரம் மட்டும்தான் அவர்கள் கொடுத்தார்கள். ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்ககே நான் உயர்ந்தேன்" எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் "அந்த காலத்தில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் நானும் ஒருத்தியாக இருந்தேன். இதை நான் இப்போதும் பெருமையாகவே சொல்லிக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாது பலமுறை நான் செத்து பிழைத்தேன். ஒருமுறை விமான விபத்து. மற்றொரு முறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன். இன்னும் ஒரு முறை தீயில் மாட்டிக் கொண்டேன்.இத்தனை நடந்தாலும் நான் உயிர் பிழைத்தேன்''எனவும் அந்தப் பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார் விஜயசாந்தி.
Listen News!