எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் அதிரடியாக வெளிவந்துள்ள ஒரு வெப் தொடர் தான் 'செங்களம்'. இந்த வெப் தொடரானது அரசியல், திரில்லர் நிறைந்ததாக உருவாகி இருக்கின்றது. இதில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், பவன், பிரேம், கஜராஜ், மற்றும் பூஜா வைத்தியநாதன் எனப் பலர் நடித்துள்ளனர்.
குறிப்பாக ஒன்பது எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் ஆனது ஜீ5 தளத்தில் கடந்த வாரம் வெளியானது. வெளியான நாள் முதல் இன்றுவரை சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் ஒன்பது எபிசோடுகள் கொண்டதாக அமைந்துள்ளது.
கதைக்களம்
இந்த தொடரானது ஆரம்பிக்கும் போதே இரண்டு வெவ்வேறு கதைக்களத்தை கொண்டதாக ஆரம்பிக்கின்றது. அதாவது ஒரு புறம் மூன்று கொலைகளை செய்துவிட்டு, காட்டில் மறைந்து வாழும் மூன்று அண்ணன் தம்பிகள் உள்ளனர். இவர்கள் எதற்காக , என்ன காரணத்தினால் கொலை செய்தார்கள்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்ற பல விதமான கேள்விகளுடன் முதல் எபிசோடு ஆனது முடிவிற்கு வருகின்றது.
அடுத்து விருதுநகர் நகராட்சி சேர்மன் பதவி எங்கள் உடைய குடும்ப சொத்து, நாங்கள் குடும்ப அரசியல் தான் பண்ணுவோம் என்று கூறி சுமார் 40 வருஷமாக அந்த கிராமத்தையை தனது கைக்குள் வைத்திருக்கிறது சிவஞானத்தின் உடைய குடும்பம்.
இந்நிலையில் சிவஞானத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவருடைய மூத்த மகன் ஆகிய ராஜமணிக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக சேர்மனாக இருந்து வருகிறார். அத்தோடு ஆளும் கட்சி, எதிர்கட்சி என யாரிடமும் விருதுநகர் சேர்மன் பதவி சென்றுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து பல ராஜதந்திர வேலைகளை செய்து வருகிறார் சிவஞானம்.
இவ்வாறு இருக்கும் போது இந்த குடும்பத்தின் சொத்தாக இருக்கும் சேர்மன் பதவியை பறிக்க பல சதித் திட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில், ராஜமாணிக்கத்தின் மூத்த மனைவி இறந்து விட , திருமணமே செய்யாமல் பல ஆண்டுகளாக தனிமரமாக வாழ்ந்து வந்த ராஜமாணிக்கத்திற்கு பணக்கார தொழிலதிபரின் மகளான சூர்யகலாவை (வாணி போஜன்) திருமணம் செய்து வைக்கிறார் அவரின் தந்தையான சிவஞானம்.
பின்னர் சம்மந்தமே இல்லாத இந்த இரண்டு கதைகளும் ஒரு மையப்புள்ளியில் இணையும் போது, அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராதாக திருப்பங்கள் தான் இந்த வெப் தொடரின் உடைய மொத்தக்கதையாக அமைந்திருக்கின்றது.
தொடர் பற்றிய அலசல்
இத் தொடரின் மூலமாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து தற்போது நிகழும் அரசியல் நிலவரம் வரை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
அதுமட்டுமல்லாது இதில் இயக்குநர் சித்தரித்த ஒரு சில கதாபாத்திரங்கள் உண்மையான சிலரை நினைவுபடுத்துகிறது. அந்தவகையில் இதில், லீட் ரோலில் சூர்யகலாவாக நடித்திருக்கும் நடிகை வாணி போஜன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவது போலவும், அவருடைய தோழியான நாச்சியார் உடன் பிறவா சகோதரி சசிகலாவை நினைவுப்படுத்தும் விதமாகவும் அமைந்து உள்ளது.
மேலும் வாணியின் தோழியாக நடித்திருக்கும் நாச்சியார் (ஷாலி நிவேகாஸ்) செய்யும் அரசியல் தந்திரங்கள் அந்தக் குடும்பத்தை மட்டுமன்றி தொடரை பார்ப்பவர்களைக்கூட கொஞ்சம் அசைத்துப் பார்க்க வைக்கின்றது.
அத்தோடு நாச்சியாரின் அண்ணாக நடித்திருக்கம் கலையரசன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார். வழக்கமாக ஹீரோவோவுக்கு அடியாளாக மட்டுமே வரும் கலையரசன், இந்த தொடரில் முறுக்கு மீசை, தாடி, மடித்து கட்டிய வேட்டி என வித்தியாசமான வேடத்தில் பட்டையை கிளப்பி உள்ளார்.
அதுமட்டுமல்லாது இத்தொடரில் வரும், பவன், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன், ஷாலி நிவேகாஷ், முத்துக்குமார், கஜராஜ், பிரேம், பூஜா வைத்தியநாதன், அர்ஜை என அனைத்து நடிகர்களும் அவரவர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து மிகவும் அழகாக நடித்திருக்கிறார்கள்.
மேலும் விருதுநகரின் அழகு, காடு, மலை, கரிசல்காடு என அனைத்தையும் மிகவும் அழகாக சித்தரித்து காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
தொகுப்பு
மொத்தத்தில் 'செங்களம்' வெப் தொடரானது தமிழகத்தில் மறைந்த, தற்போது உயிருடன் இருக்கும் முக்கிய அரசியல் புள்ளிகளை நினைவுப்படுத்தி சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!