• Nov 19 2024

மர்ம நபரிடம் சிக்கிய சுய நினைவினை இழந்த ஹீரோ.. 'மெமரீஸ்' படத்தின் திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களின் நாயகன் வெற்றி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இப்படமானது சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம் என்ற மலையாள இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷின் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தின் திரை விமர்சனம் குறித்து நோக்குவோம்.


கதையின் கரு 

அந்தவகையில் 'மெமரீஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார் ஹீரோவாக நடிக்கும் வெற்றி. அதாவது வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது என கூறுகிறார். இந்த ஃப்ளேஷ் பேக்கில் இருந்து தான் கதை நகர்கிறது. 

பின்னர் ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. அவரின் சட்டையெல்லாம் ரத்தக்கறையாக இருக்கின்றது, தான் யார் என்பதே அவருக்கு சுத்தாமாக நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை வெற்றி தெரிந்து காெள்கிறார். 

இதனால் தன்னை அடைத்து வைத்திருக்கும் அந்த நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்..” என அடுத்தடுத்து பல கேள்விகளை கேட்கிறார். அதற்கு அவர் "நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்" என ட்விஸ்ட் மூலம் பதிலளிக்கின்றார் அந்த மர்ம நபர். 

இதனைத் தொடர்ந்து அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஹீரோவை துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் "என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?" என வெற்றியிடம் கேட்கிறார்.

இவ்வாறாக ஹீரோவான வெற்றியை சுற்றி என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது அவர்தானா?  அவரை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நோக்கி நகர்கிறது இந்தப் படத்தினுடைய திரைக்கதை. 

குறை, நிறைகள் 

மெமரீஸ் படத்தில் ஹீராேவிற்கு மட்டுமல்லாமல் அவரை சுற்றி வரும் கதாப்பாத்திரங்களுக்கும் டபுள் ரோலாகத் தான் அமைந்திருக்கின்றது. அதாவது மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க இயக்குநர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால், அவரின் முயற்சி இறுதியில் தோல்வியிலேயே முடிந்துள்ளது. 

அதாவது இப்போது வெளிவரும் பல டைம்-ட்ராவல், சைக்காலஜி த்ரில்லர் படங்களில் கதைக்குள் கதை வைப்பது ஒரு இயல்பான விஷயம்தான். ஆனால், அப்படி படத்திற்குள்ளே சொருகப்படும் கதைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. இருப்பினும் இப்படத்தில் அந்த எல்லையை சற்று மீறி உள்ளனர். முதலில் ஏதோவொரு இயல்பான இளைஞராக காட்டப்படும் ஹீரோ வெற்றி, பிறகு தனது நினைவுகளை இழந்து விட்டு கொலைகாரனா? நல்லவனா? என்று தெரியாமல் விழி பிதுங்கும் மனிதனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அதன் பிறகு வைக்கப்படும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராத ஒன்றுதான். ஆனால் அதையடுத்து 'சர்ப்ரைஸ் ட்விஸ்ட்' எனும் பெயரில் எதையோ வைத்து, முடிக்க தெரியாத ஒரு நல்ல கதையை ஏனாே தானோ என்ற பாணியில் இறுதியில் முடித்துள்ளனர். ஆகவே இதை சிக்கலான கதை என கூறுவதை விட, மிகவும் குழப்பமான கதை என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

கதாப்பாத்திரங்களின் பங்கு:

இப்படத்தின் நாயகன் வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் காதல் காட்சிகளிலும், சைக்கோ வில்லன் காட்சிகளிலும் தனது இயல்பான நடிப்பை விடுத்து வேறு ஏதோ செய்ய முயற்சித்து இறுதியில் தோல்வியுற்றிருக்கிறார். 

அதேபோல் ரமேஷ் திலக், நண்பன்-காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். மேலும் நாயகியாக களம் இறங்கியுள்ள பார்வதிக்கு இப்படத்தில் பெரிதாக நடிக்க வேண்டிய வேலை இல்லாமல் போய் விடுகிறது. மனோதத்துவ மருத்துவராக வரும் ஹரிஷ் பேரடியின் மலையாளம் வாசம் வீசும் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு ஆங்காங்கே சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கிறது. 

ரசிகர்களின் கருத்துக் கணிப்பு 

இப்படத்தினுடைய ட்ரைலரை பார்த்துவிட்டு, “ஆஹா ஓஹோ” என நினைத்து கொண்டு படத்தை பார்க்கும் ரசிகர்களின் முகத்தில் ‘சப்’பென அறைந்து விடுகிறது இப்படத்தின் திரைக்கதை. அந்தவகையில் காட்டிற்குள் நாயகன் ஓடும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்.  

நல்ல ஒன்-லைன் ஸ்டோரியை இரண்டாம் பாதிக்கு மேல் சொதப்பி வைத்திருக்கின்றனர் படக்குழுவினர். அதாவது படம் முடிந்து எப்போது வெளியே ஓடுவோம் என்ற எண்ணத்துடனேயே இடைவேளைக்கு அடுத்த பாதியை பார்த்ததாக ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்களை பார்க்கமுடிந்தது.

மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் பொறுமைசாலியின் பொறுமையும் ரொம்பவே சாேதிக்கின்றது. முதல் பாதியில் இருந்த வேகமும் விவேகமும் அடுத்த பாதியில் இல்லை என்று கூறலாம். இருக்கை நுனிக்கு வரவைக்காத சைக்கோ-த்ரில்லர் என்றாலும் இருக்கையில் இருந்து எழுந்து ஓட செய்யாத கதையாகத்தான் இருக்கிறது மெமரீஸ். ஆகவே மொத்தத்தில் 'மெமரீஸ்' ஒரு குழப்பமான திரைக்கதை எனக் கூறலாம்.

Advertisement

Advertisement