இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.
மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் வடிவேலு, கங்கனா ராணவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கின்றார். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.
கதைக்களம்
அந்தவகையில் பல நாட்களாக பணக்கார குடும்பம் ஒன்று தொடர்ந்து பல பிரச்சினைகளை அடிக்கடி சந்தித்து வருகிறது. இதனையடுத்து அக்குடும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரே ஒரு வழி குல தெய்வ வழிபாடு தான் எனக் குருஜி ஒருவர் கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து அந்த பணக்காரக் குடும்பம் குலா தெய்வ வழிபாட்டிற்காக அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் இணைந்து அந்தப் பணக்கார குடும்பத்திற்கு எந்தவிதத்திலும் இரத்த சம்பந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) செல்கின்றார்.
அந்தவகையில் இவர்கள் அனைவரும் தமது சொந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனைக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் பல அமானுஷ்ய நிகழ்வுகளை சந்திக்கின்றனர். இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கிறதா என்பதே 'சந்திரமுகி 2' படத்தினுடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.
கதை எப்படி?
ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தினிடைய தொடர்ச்சி தான் இப்படத்தில் காட்டப்படுகிறது. குறிப்பாக முதல் பாகத்தில் முருகேஷனாக நடித்த வடிவேலு இந்த பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோன்று வேட்டையன் மற்றும் சந்திரமுகியை சுற்றியே படக்கதை நகர்கிறது. மேலும் பொதுவாக பேய் படங்களில் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து அதனால் இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள்.
ஆனால் 'சந்திரமுகி-2 படம் இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. அதாவது எந்தவொரு தொடர்பும் இல்லாத மூன்றாவது நபர்கள் இப்படத்தில் பலியாடாக மாறுகின்றார்கள்.
நடிகர்களின் நடிப்பு
அந்தவகையில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லக்ஷ்மி மேனன், ஷ்ருஷ்டி டாங்கே, ஒய்.ஜி.மகேந்திரன், மானஸ்வி கொட்டாச்சி, ஆர்.எஸ்.சிவாஜி, மனோ பாலா என அனைவருமே தமது கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளனர்.
மேலும் பாண்டியன் மற்றும் வேட்டையனாக நடித்த ராகவா லாரன்ஸும் தனது அசத்தலான நடிப்பை ரஜினியைப் போல வழங்கி இருக்கின்றார்.
அதேபோன்று பால்கார பெண்ணான மஹிமாவின் நடிப்பில் தோட்டக்கார பெண்ணாக நடித்த நயன்தாராவையே அச்சு அசலாக காண முடிகின்றது.
அத்தோடு நடிகை ராதிகாவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளதனால், முதல் பாகத்தில் பார்த்த நகைச்சுவை குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
அதேபோன்று லக்ஷ்மி மேனன் பாதியில் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
மேலும் சந்திரமுகி தோற்றத்தில் நடித்த கங்கனா ரணாவத்தை ஜோதிகாவோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
பாடல்கள்
கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தாலும் ஒவ்வொரு பாடலிலும் முதல் பாகத்தில் வந்த சந்திரமுகியை தான் நினைவூட்டும் வகையில் உள்ளது.
நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த "ரா ரா”பாடலை இரண்டு வெர்ஷனில் உருவாக்கி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கின்றார்கள்.
தொகுப்பு
மொத்தத்தில் இப்படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் 'சந்திரமுகி' படம் பிடித்தவர்கள் அதனையுடைய இரண்டாவது பாகத்தையும் தியேட்டருக்கு சென்று கண்டு களிக்க முடியும்.
Listen News!