• Nov 10 2024

காதலுக்கு எதிரி சாதிதான்டா... 'முந்திரிக்காடு' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மு. களஞ்சியம் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் 'முந்திரிக்காடு'. இப்படமானது ஆணவக்கொலைகள் பற்றியும், சாதி வெறி பற்றியும் கூறுகின்றது. இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்து நோக்கலாம்.

கதையின் கரு

இந்தப் படத்தின் உடைய கதையானது "காதலுக்கு எதிரி சாதின்னா..அந்த சாதிக்கு எதிரி காதல்தான்டா.." என்ற பஞ்ச் வசனத்தை மையமாக கொண்டு அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், சாதிதான் எல்லாமே. அங்கு சாதி மாற்றி காதலிக்கும் ஜோடிகளை தேடித்தேடி வெட்டிக் கொலை செய்து வருகின்றனர் அவ்வூரில் உள்ள சாதிய வெறிபிடித்த கும்பல் ஒன்று. அந்த கிராமத்தில் IAS கனவுடன் வாழும் உயர் சாதியை சேர்ந்த 'தெய்வம்' என்ற ஒரு பெண்ணிற்கும், போலீஸ் கனவுடன் வாழும் கீழ் சாதி இளைஞன் செல்வாவிற்கும் இல்லாத காதலை இருக்கு எனக்கூறி சம்பந்தப்பட்டவர்களை சாதி பெருமை என்ற பெயரில் சாதியவாதிகள் பலரும் துன்புறுத்துகின்றனர்.

இவ்வாறாக அவர்கள் பற்றி இவர்களே ஒரு பொய்யை கிளப்பி விட, தெய்வத்திற்கும் செல்லாவிற்கும் உண்மையிலேயே காதல் வந்து விடுகிறது. இதன் காரணமாக அந்த சாதி வெறி பிடித்த கும்பல், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அந்த காதல் ஜோடியை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். 

அந்தவகையில் ஒரு கட்டத்தில், நாயகியை ஊருக்கு நடுவில் வைத்து முடியை அறுத்து அவர்கள் மானபங்கம் செய்கின்றனர். இவ்வளவையும் தாண்டி, தெய்வம், செல்லாதான் வேண்டும் என விடாப்பிடியாக ஒற்றை காலில் நிற்க, அவளை கொல்ல வேண்டும் என அப்பெண்ணின் சாதியை சேர்ந்தவர்கள் பலரும் முடிவெடுக்கின்றனர். 

இதனையடுத்து நாயகி கொலை செய்யப்பட்டாரா?  செல்லாவும் தெய்வமும் வாழ்க்கையில் இணைந்தார்களா? இந்த சாதிய வெறிக்கு உண்மையான காரணம்தான் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது படத்தினுடைய மீதிக்கதை.


படம் பற்றிய அலசல் 

அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாதியப் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் 'முந்திரிக்காடு' திரைப்படம். வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் பலரும் சாதியின் பெயரால் கொடூரமாக கொல்லப்படுவதையும் படித்த பல இளைஞர்களே ‍இது போன்ற சாதி வெறி பிடித்த செயல்களில் மோசமாக ஈடுபடுகிறார்கள் என்பதையும் யதார்த்தத்துடன் மிகவும் அழகாக காட்டியுள்ளார் இயக்குநர்.

அதுமட்டுமல்லாது "சாதி.. சாதி.." என படம் முழுவதும் ஒரு ஊரே பேசுவது, நம்புவதற்கு ஏதுவாக இருக்கவில்லை. இதில் காதல் காட்சிகளும் அதற்காக காதல் ஜோடி போராடும் காட்சிகளும், சுத்தமாக மனதில் நிற்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் புதுமுகங்களின் நடிப்பு என்றே கூறலாம்.


நடிகர்களின் பங்களிப்பு:

முந்திரிக்காடு படத்தில், வேகத் தடைகள் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. வேகமாக சென்றால்தானே தடை ஏற்படுவதற்கு! பாடல்கள் அனைத்தும் சுமாருக்கு கீழ் ரகம் என்ற வகையில் அமைந்திருக்கின்றன. 

அத்தோடு புது முகமாக களமிறங்கி இருந்தாலும், படம் முழுவதும் ஒற்றை கையால் தூக்கி சுமக்கிறார் கதாநாயகி சுபப்பிரியா மலர். அதுமட்டுமல்லாது க்ளைமேக்ஸ் எமோஷனல் காட்சியில் அசத்தலாக நடித்துள்ளார். மேலும் நாயகனாக வரும், புகழிற்கு இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் வேண்டும் என்றே கூற வேண்டும். அதுபோன்று நாயகியின் அப்பாவாக ஜெயராவ் உயிரைக் கொடுத்து நடித்திருக்கின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

சீமான் அட்வைஸ்

நாம் தமிழர் கட்சியின் உடைய தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநருமான சீமான், 'சாட்டை ' பட சமுத்திரகனி போல சாதி வெறிபிடித்த இளைஞர்களுக்கு படம் முழுவதும் பலவாறு அட்வைஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

அத்தோடு இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் இவர், கட்சி கூட்டங்களின்போது, மேடையில் பேசுவதுபோல பல படத்தினுடைய காட்சிகளில் தமிழர் பெருமை-தமிழரின் பண்பு என அடுக்கு மொழியில் வசனம் பேசி ஆங்காங்கே பட்டையைக் கிளப்பி இருக்கின்றார். இவருக்காகவே படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏராளம் என்று கூறலாம்.

ஹீரோ-வில்லன் 

இப்படத்தின் ஹீரோ யாரென்று பார்த்தால், அது நடிகர்களோ முக்கிய கதாப்பாத்திரங்களோ கிடையாது என்று சொல்லலாம். இதில், சாதி விட்டு சாதி மாறி காதலிக்கும் காதலர்களின் காதலை ஹீரோவாகவும் அவர்களை பிரிக்க இடையில் முட்டுக்கட்டையாக இருக்கும் சாதியை வில்லனாகவும் சிறப்பாக காண்பித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாது "காதல்தான் சாதியை ஒழிக்க இருக்கும் ஒரே ஆயுதம்.." என இவர்கள் கூற வரும் கருத்தினை ஏற்றுக்கொள்ள பொதுவாகவே அனைவருக்கும் சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிராமப் புறங்களில் சாதி வெறிபிடித்து இருப்போரை "நகரத்துக்கு வாங்க டா..அங்க இருந்துட்டு சாதியப் பத்தி நினைக்காம செத்துப்போங்க டா.." எனக்கூறுவது இப்படத்தில் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், நகரத்தில் சாதி இருப்பதை மறுப்பது போல இது அமைகின்றது.

தொகுப்பு 

மொத்தத்தில் முந்திரிக்காடு படம் சொல்ல வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சுருங்கச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்றே கூறலாம்.

Advertisement

Advertisement