ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவான் கான்வே 77 ரன்கள் விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, ஐதராபாத் அணியின் இளம் வீரர்களோடு சிறிது நேரம் உரையாடினார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்களான பிரையன் லாரா மற்றும் டேல் ஸ்டையின் ஆகியோரை தோனி சந்தித்தார். பின்னர் ஐதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் தனது ஜெர்சியில் தோனியின் கையெழுத்தை பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வீரர் நடராஜனின் குடும்பத்தினரையும் தோனி சந்தித்தார். நேற்றையப் போட்டியில் நடராஜன் களமிறங்காத நிலையில், போட்டி முடிந்த பிறகு நடராஜன் தோனியை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நடராஜனின் மகளுடன் தோனி சிறிது நேரம் விளையாடினார். அந்த வீடியோ தற்போது சமூலவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தோனி கூறுகையில், "என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்" என்று கூறினார்.
#Dhoni With #Natarajan Family🧡✨pic.twitter.com/sJaQKD20Bi
Listen News!