• Nov 17 2024

'பிச்சைக்காரன் -2' படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'. இப்படம் ஆனது ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார். 

அதாவது அவர் அந்தப் புகாரில் மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆய்வுக் கூடம்' திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். 


இதனையடுத்து விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது என்றும் அந்த படத்தை பார்த்தது கூட இல்லை என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது வழக்கு தொடரப்பட்ட பிறகே தான் அந்த படத்தை பார்த்ததாகவும் பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் விஜய் ஆண்டனி கூறி இருந்தார்.

அத்தோடு படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தனக்கு பெருத்த இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி அந்த பதில் மனுவின் வாயிலாக வேதனை தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் பிச்சைக்காரன் -2 திரைப்படம் வருகிற மே 19ம் தேதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement