• Nov 10 2024

அந்த கருமத்தை அறிவது எப்படி? தாத்தா பெயரிலும்.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஓபன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  இசையமைப்பாளரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதி பேச்சுக்களை விமர்சித்து இருக்கிறார். சாதி என்கிற கருமம் தலைப்பின்கீழ் எப்படியெல்லாம் சாதியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வந்தபிறகு பள்ளியில் போய் என் சான்றிதழ்களை வாங்கச் சென்றேன். வாங்கி அதைப் பார்த்துக்கொண்டே வரும்போது ஒரு ஆவணத்தில் என் பெயர், பிறகு Indian, Christian - xxxxxx என்று போட்டிருந்தது. எல்லாம் புரிந்தது, அது மட்டும் என்னவென்று புரியவில்லை. ஒன்றும் மண்டைக் குடைச்சலெல்லாம் இல்லை. ஏதோவென்று விட்டுவிட்டேன். வீட்டில் அம்மாவிடம் அந்தச் சான்றிதழ்களைக் காட்டும்போது இது நினைவுக்கு வந்ததால் அதைக்காட்டி என்னவென்று கேட்டேன்.

என்ன சொன்னார்களென்று நினைவில்லை. ஆனால் என் அறிவுக்கு எட்டவில்லை போல, அது மனதில் பதியவில்லை. சுமார் 32 வயது இருக்கும். திருநெல்வேலிக்கு இசை நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். அடிக்கடிப் போய்வருவேன். ஏராளமான இசைத்துறை நண்பர்கள் அங்குண்டு எனக்கு. ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களோடு சிரிப்பும் அரட்டையுமாக இருந்தபோது 'இந்த வார்த்தை' அவர்களால் பயன்படுத்தப்பட்டது. என் காதுகள் நீண்டன.


கவனித்தேன், அவர்கள் உரையாடலை. அது ஒரு சாதிப்பெயர் என்பதை ஊகித்துக் கொண்டேன். சுமார் 40 வயது இருக்கும். கடவுச்ச்சீட்டு விண்ணப்பத்தை நிரப்பும்போது என் தாத்தா பெயரை எழுதும்போது அவர்கள் பயன்படுத்திய 'இன்னொரு சொல்' என் தாத்தாவின் பெயரில் இருந்தது. எனக்கு வியப்பு! இன்னும் கொஞ்ச காலம் கழித்து அந்தப் பிரிவுக்கு இருவேறு பெயர்கள் உள்ளன என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடந்த வருடம் எனது ஒத்த வயதுடைய எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இதைப்பற்றி என்னிடம் நேரடியாகவேப் பேச நேர்ந்தது. அவரது தொழில் அனுபவம், வாழ்க்கை அனுபவம், ஊடக அனுபவம், அடிப்படை குயுக்தி, கெட்டிக்காரத்தனம், நட்பாய் பழகும் சுபாவம் என பலங்கள் அதிகம் நிறைந்தவர். ஒரு தொலைபேசி உரையாடலில் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் திடீரென என்னிடம் "நீங்கள் xxxxxxx தான?" என்றார்.


எனக்கு பயங்கர வியப்பு. அவர் அறிவாளி என்பது தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம்தான். நான் சுழியமாக இருக்கும் ஒரு விஷயத்தில் அவர் முனைவர் என்பதை அறிந்து அசந்துவிட்டேன்! "என்ன யோசிக்கிறீங்க? சரிதான?" என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே கேட்டார். "எப்படிச் சொன்னிங்க?" என்று அதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினேன்.

இதெல்லாம் ஜுஜுப்பி என்பது போல பதிலே சொல்லாமல் பலமாகச் சிரித்தார். இந்தக் கருமமெல்லாம் தெரியாமலே போய்த் தொலைக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் பெற்றோருக்கு நன்றி சொல்கிறேன்!" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் மேலும் ஒரு பதிவை பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.


அதில், "என் அம்மாவின் சாதி என்னவென்பது இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. ஒருவேளை என் அண்ணன்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை, அவசியமும் இல்லை. சமீபத்தில் என் 25 வயது மகன் அவன் படிப்பு தொடர்பாக ஒரு மனுவை நிரப்பும்போது "There's some caste thing or something.. what do I write?" என்று கேட்டான். "அது நமக்குத் தொடர்பில்லாதது, விட்டுவிடலாம் ("It's not applicable to us, you can just leave it blank") என்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement