இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்தியேனுடன் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து சத்தியராஜ் நடித்துள்ளார்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். மரியா , போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பித்தது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக நடிகை மரியா ரியாபோஷாப்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனுதீப் இருக்கும் BTS புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், நாங்கள் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டோம்.இந்த பயணம் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. வேறொரு நாட்டில் 4 மாதம் தங்கி நல்ல மனிதர்கள் சூழ படப்பிடிப்பு செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுடன் இருப்பது போல இந்த அனுபவம் இருந்தது. படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என நடிகை மரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!