1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
இது தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், மயில்சாமியின் நினைவுகளை நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் படவா கோபி நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்து கொண்டார். அதில், "நடிகர் மயில்சாமி நடிகர் என்பதையும் தாண்டி அவருக்கு குரல் கலைஞராக இன்னொரு முகம் உள்ளது.
அவர் குங்ஃபூ சண்டை காட்சிகளின் போது கொடுக்கும் சத்தங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவ்வளவு கிரியேட்டிவ்வானவர். எனக்கு பர்சனலாக அவர் மிகவும் நெருங்கிய நண்பரானது ஒரு என்னுடைய திருமணத்தின் போது தான்.
அப்போது நான் வளர்ந்து வரும் மிமிக்ரி கலைஞராக இருக்கும் பொழுது என்னுடைய சக துறையில் மூத்த மற்றும் ஏற்கனவே சாதித்த கலைஞராக இருந்த மயில்சாமி அவர்களுக்கு போன் செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு அவரை வரவேற்புக்காக அழைப்பதற்காக போன் செய்தேன். அதற்கு மிகவும் தயங்கினேன். ஆனால் அவர் எங்கே எப்போ என்று மிகவும் ஆர்வத்துடன் கேட்டார். அப்போதும் அவர் திருமணத்திற்கு வருவாரா என்பது குறித்து எனக்கு யோசனை இல்ல. ஆனால் அவர் என்னுடைய திருமண வரவேற்புக்கு முதல் ஆளாய் வந்து நின்று எனக்கு திருமண பரிசு கொடுத்து, அதன் பிறகு அரை மணி நேரம் திருமண நிகழ்ச்சியில் மிமிக்ரி பண்ணிவிட்டு தான் சென்றார்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
Listen News!