ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.
விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் சூரி,விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியும் பிரபல இசைக்கலைஞர், நடிகர் ஜீ.வி.பிரகாஷின் சகோதரியுமான, பவானி ஸ்ரீ, தான் நடிக்க வந்தது குறித்து பிரபல சேனலில் பேசும்போது, “என் குடும்பத்தில் அனைவரும் இசை கலைஞர்களாக உருவெடுத்தனர். எனக்கு அதில் ஆர்வம் இருந்தது. ஆனால் இசை கலைஞராக வேண்டும் என்று அதீத வேட்கை இருந்ததில்லை. நான் என்ன துறையை தேர்ந்தெடுக்கிறேன் என்பதை கண்டுபிடிக்கவே எனக்கு நீண்ட காலம் பிடித்தது. போட்டோகிராபராக இருந்தேன், பிறகு திரைப்படம் உருவாக்கும் ஆர்வம் இருந்தது. சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன்.
அப்போது என் போன்ற சக உதவி இயக்குநர்கள் நடிப்பதற்கு ஆள் இல்லை எனும் பொழுது என்னை அணுகினார்கள். அவர்களின் குறும்படங்களில், திரைப்படங்களில் நடிக்க கேட்பார்கள். அவற்றைச் செய்யும்போது நான் மிகவும் விரும்பினேன். இப்படித்தான் நான் நடிக்க வந்தேன். விடுதலை திரைப்படத்தைப் பொறுத்தவரை வெற்றிமாறன் சார் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவார். ஒரு சிறிய கதாபாத்திரமாக என்றாலும் கூட அது அழுத்தமாக இருக்கும். எனவே அவருடைய திரைப்படத்தில் நடித்தது மிகப்பெரிய விஷயமாக எனக்கு இருந்தது” என்று குறிப்பிட்டார்.
மேலும் முதல் நாளில் இருந்தே அவரை குமரேசனாக பார்க்க முடிந்தது. இதுவரை சூரி நடிச்சதிலேயே இது மிகவும் வித்தியாசமான கேரக்டர் மற்றும் பெர்ஃபார்மென்ஸ். உடல் ரீதியாக சில கஷ்டமான காட்சிகள் வரும்போது, ஒரு பக்கம் பயந்து யோசிப்பார். அதே சமயம் அதை நடிக்கும்போது அதற்கு நியாயம் செய்யும் வகையில் நடிப்பார். தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கான மெனக்கெடலை செய்யவும், கடின உழைப்பை கொண்டுவரவும், அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.” என குறிப்பிட்டார்.
Listen News!