• Nov 19 2024

'சோறு தண்ணி இல்லாமல் கஷ்டப்பட்டேன்...' நடிகர் சஷிகுமார்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா மீது இருக்கும் மோகத்தால் மிகவும் சிரமப்பட்டு அலைந்து திரிந்து கடைசியாக ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்து பின்னர் ஒரு நல்ல நிலைக்கு வந்தவர்கள் ஒரு சிலர் மட்டும் என்று தான் கூற வேண்டும். பல கலைஞர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஒரு சிலர் நல்ல வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தவித்து வருகிறார்கள்.

அப்படி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான முகமாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தவித்து வந்த ஒரு நடித்த சஷிகுமார் சுப்பிரமணி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் மணிரத்னத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் ஒரு மனித வெடிகுண்டாக நடித்தது மற்றும் இயக்குநர் பாலுமகேந்திராவின் "தலைமுறைகள்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான். அதற்கு பிறகு ஆனந்தம், ஷாஜஹான், நள தமயந்தி, திருப்பாச்சி, படிக்காதவன் மற்றும் பல திரைப்படங்களில் இவரை நாம் பார்த்துள்ளோம். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் மிக சிறப்பாக நடிக்க கூடிய ஒரு திறமையான நடிகர்.


அத்தோடு தமிழில் "யாழ்" திரைப்படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர்  சஷிகுமார் சுப்பிரமணி நடித்துள்ள திரைப்படம் "ஒன் வே". எம்.எஸ். சக்திவேல் இயக்கத்தில் ராஜாத்தி பாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ரிஸ்க் எடுத்து போதைக்கு அடிமையானவர் போல் சிறப்பாக நடித்துள்ளார் சஷிகுமார். தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்துள்ள புனர்ஜென்மம் இது. எனினும் சமீபத்தில் தான் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் இவர் கொடுத்த ஒரு நேர்காணலில் சினிமாவில் அவரின் பயணம் பற்றி சில அனுபவங்களை பகிர்ந்தார். இயக்குநர் பாலுமகேந்திரா விடம் 2000 ஆண்டு சேரும் போது வெறும் ஒரு கத்துக்குட்டியாக இருந்தவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை வளர்த்து கொண்டார். ஆனந்தம் திரைப்படம் மூலம் நடிகர் மம்மூட்டியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம் பெற்றவர்.

சஷிகுமார் தெரிவிக்கையில் " எனது குடும்பத்திற்கு நான் சினிமாவில் நுழைந்ததில் சிறிதும் விருப்பமில்லை. ஒரு புரொஃபஸரின் மகனாக இருந்தும் சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் அவர்களிடம் எந்த ஒரு உதவியும் எதிர்பார்க்காமல் மிகவும் சிரமப்பட்டு தான் சினிமாவில் நுழைந்தேன். எத்தனையோ இடங்களில் கழுத்தை பிடித்து தள்ளி இருக்கிறார்கள். சினிமாவிற்காக சென்னைக்கு வந்து சோறு தண்ணி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அத்தோடு இந்த உலகம் வெற்றி பெற்றவர்களை மட்டுமே நினைவில் வைத்து கொள்ளும் ஆனால் நான் வெற்றி பெற்றவன் அல்ல. ஒரு திறமையான நடிகர் என்று சொல்லலாம் ஆனால் நான் ஒரு வெற்றி பெறாத நடிகர்" என மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சஷிகுமாரின் மிகவும் பிடித்தமான நடிகர் ரகுவரன் மற்றும் அமிதாப் பச்சன். மேலும் அவர்கள் தான் இவரின் ரோல் மாடலாம். சிலர் நீங்கள் அவர்களை போலவே இருக்கீங்க என உசுப்பேற்றியது தான் சினிமா மீது ஆசை வந்ததற்கு முக்கியமான காரணம் என்கிறார் சஷிகுமார். ஓர் இரு முறை மட்டுமே நடிகர் ரகுவரனை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். நடிகர் ரகுவரனுக்கு ஈடு இணையாக யாராலும் வரமுடியாது.

அத்தோடுஒரு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் 'ஒன் வே' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் சஷிகுமார் மீண்டும் தனது நடிப்பு திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறார். கோவை சரளா, ஆரா, பாவா செல்லதுரை, ரவீந்த்ரா, அப்துல்லா, தோனி, சுர்ஜித், பில்லி மற்றும் கிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் நவம்பர் 4ம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

Advertisement