கடந்த 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். முதல் படத்திலேயே ரசிகைகளின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களிலும் நடித்தார்.கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே. சம்பந்தம் தான் அப்பாஸின் 25வது படமாகும். ரஜினிகாந்தின் படையப்பா படத்திலும் நடித்திருந்தார்.
2015ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அப்பாஸ்.அவர் தன் குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்தியா திரும்பியிருக்கும் அப்பாஸ், பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
என் படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அதன் பிறகு என் படங்கள் தோல்வி அடைந்ததால் பணக் கஷ்டம் ஏற்பட்டது. வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லை. வேறு வேலை செய்ய என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியை அணுகி வேலை கேட்டேன். பூவேலி பட வாய்ப்பு கொடுத்தார்.
பின்னர் நடிப்பு போர் அடித்துவிட்டதால் சினிமாவில் இருந்து விலகினேன். என் குடும்பத்தை காப்பாற்ற நியூசிலாந்தில் டாக்சி ஓட்டினேன், பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தேன்.நான் பேட்டிகள் எல்லாம் கொடுப்பது இல்லை. வெளிநாட்டில் வாழ்ந்தபோது நான் அளித்த பேட்டிகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன. எப்பொழுது மீண்டும் படங்களில் நடிப்பீர்கள் என கேட்டு ரசிகர்கள் அவ்வப்போது போன் செய்வார்கள். நான் மனநல மருத்துவமனைக்கு சென்றதாகவும், இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது என்று கூறி சிலர் போன் செய்திருக்கிறார்கள்.
நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. ஆனால் கோவிட் நேரத்தில் மட்டும் அப்படி இல்லை. நியூசிலாந்தில் இருந்து ஜூம் கால் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தேன். அந்த நேரத்தில் கஷ்டப்படுபவர்கள் குறிப்பாக தற்கொலை எண்ணத்துடன் போராடுபவர்களுக்கு உதவ நினைத்தேன்.அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்திருக்கிறது.
10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பிறகு தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். சாலையோரம் நின்று வேகமாக வரும் வாகனத்தின் முன்பு குதித்து தற்கொலை செய்ய நினைத்தேன். அப்பொழுது அந்த வழியாக வந்த பைக்கை பார்த்தபோது நான் சாக நினைத்து குதித்தால் அந்த நபரின் வாழ்க்கையும் பாதிக்குமே என தோன்றியது. அந்த நேரத்தில் கூட அடுத்தவர்களின் நலன் பற்றி யோசிக்கத் தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!