ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர் இயக்குநர் முருகதாஸ்.இவர் தனது முதல் படமான தீனா படத்திலிருந்து கடைசியாக எடுத்த தர்பார் வரை முன்னணி ஹீரோக்களை வைத்தே படம் இயக்கியவர். அப்படி இருக்கும்பட்சத்தில் கமல் ஹாசனுடன் ஏன் அவர் இணையவே இல்லை என்ற கேள்வி ரசிகர்களிடம் நெடுங்காலமாகவே இருந்தது.
இதுகுறித்தும் பேட்டியில் பேசிய அவர், " கமல் என்றாலே பொதுவாக எனக்கு சிறிய பயம் இருக்கும். ஆனால் அனைத்து இயக்குநர்களுக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தப் படம்தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும்.
திரைத்துறையில் இருபது இயக்குநர்களை எடுத்துக்கொண்டால் அவர்களது மிகச்சிறந்த படங்களில் ஒன்று கமலுடன் இணைந்ததாக இருக்கும். எனவே நான் சாதாரணமாக கமலை வைத்து ஒரு படத்தை எடுத்துவிடக்கூடாது என்ற பயத்தில்தான் இதுவரை அவருடன் படம் செய்யவில்லை" என்றார்.
முருகதாஸ் தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்து ஆகஸ்ட் 14 - 1947 படத்தை தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தை அவரின் இணை இயக்குநரான பொன்குமார் இயக்கியிருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவும் கமிட்டாகியிருக்கிறார் முருகதாஸ். அந்தப் படத்திற்கான் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்துவருவதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!