தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக வெளியான திரைப்படம் 1990ம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காமராஜன். கமல் நான்கு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். டெக்னாலஜி ஏதும் இல்லாமல் இப்படியொரு படம் எப்படி எடுக்கப்பட்டது என இப்போதும் திரையுலகினர் வியந்து பார்ப்பதுண்டு. கமலுடன் குஷ்பூ, நாகேஷ், மனோரமா, ரூபினி, ஊர்வசி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கிரேஸி மோகனின் காமெடியான வசனங்கள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தன. அதேபோல், இளையராஜாவின் இசையில் பாடல்கள், பிஜிஎம் இரண்டுமே ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்தது. மைக்கேல் மதன காமராஜன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் பெங்களூருவில் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது நடந்த சில சுவாரஸ்யங்களை குஷ்பூ ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடல் தான் முதலில் படமாக்கப்பட்டது. அப்போது கிராபிக்ஸ் எல்லாம் கிடையாது என்பதால், கமல் சாரின் காஸ்ட்யூம்ஸ் கொஞ்சம் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என செலக்ட் செய்தோம். அந்த காஸ்ட்யூம் செலக்ஷனில் நானும் இருந்ததால், கமல் சார் அவரது ரூம் கீயை என்னிடம் கொடுத்துவிட்டார். அதனால், அடிக்கடி கமல் சார் இல்லாத நேரத்தில் அவர் ரூம் சென்றுவர வேண்டியிருக்கும்.
அப்படி போகும் போது, ட்ரெஸ்ஸிங் டேபிளில் கமல் சாரின் விதவிதமான வாட்சுகள் இருக்கும். அதையெல்லாம் எடுத்து போட்டுப் பார்ப்பேன். அதேபோல அவரது ஷூஸ்ஸையும் எனது கால்களில் போட்டு அழகுப் பார்ப்பேன். மேலும், அவரது Perfumes எடுத்து அடித்துக்கொள்வேன். ஆனால், அது குறைந்துவிடும் என்பதை யோசிக்காமல் அப்படி செய்து வந்ததை கமல் சார் கண்டுபிடித்துவிட்டார். ஒருநாள் ஷூட்டிங்கில் வைத்தே Perfume-லாம் யூஸ் பண்ணிங்களான்னு கேட்டு சிரித்துவிட்டார் என குஷ்பூ கூறியுள்ளார்.
மேலும், மைக்கேல் மதன காமராஜன் தான் கமல் சாருடன் நான் நடித்த முதல் திரைப்படம். அதன்பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினோம். ஆனாலும், அடுத்து அவருடன் சிங்கார வேலன், வெற்றி விழா ஆகிய படங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது எனக் கூறியுள்ளார். கடந்தாண்டு கமல் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் டிவி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் குஷ்பூவும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Listen News!