தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் தான் ஷங்கர். இவரது ஒரு படத்தில் நடித்தாலே போதும் என்பது பல நடிகர் மற்றும் நடிகைகளின் ஆசையாகவே உள்ளது.அதே போன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது பெரும்பாலான இயக்குநர்களின் விருப்பமாகவும் உள்ளது.
அந்த வகையில் ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார் ஷங்கர். இதனால் ஷங்கர் மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் ரஜினி. அதே போன்று ரஜினியை கொண்டாடுகிறார் ஷங்கர். இந்நிலையில் தான் ரஜினி மீது ஷங்கர் கோபப்பட்டது பற்றி பேசப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் நடிக்குமாறு ரஜினியை கேட்டிருக்கிறார் ஷங்கர். ஆனால் ரஜினியோ முடியாது என்று கூறிவிட்டாராம். முதல்வனை அடுத்து சிவாஜி படத்தின் கதையை தயார் செய்து ரஜினியிடம் கேட்டபோதும் மறுத்திவிட்டாராம். ரஜினி இப்படி இரண்டு முறை நோ சொன்னதால் ஷங்கருக்கு கோபம் வந்துவிட்டதாம். அவர் என் வீட்டிற்கே வந்து என்னை வைத்து படம் பண்ணுங்க என்று கேட்டால் கூட படம் எடுக்க மாட்டேன் என கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கோபமாக சொல்லியிருக்கிறார் ஷங்கர். அவர் கூறியதை ரஜினியிடம் தெரிவித்தாராம் வைரமுத்து.
அந்த சம்பவம் நடந்த பிறகு தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனை சந்தித்த ரஜினியோ, சார் நாம் சேர்ந்து பெரிய படம் பண்ணலாமா என கேட்டிருக்கிறார். அதற்கு சரவணனோ, பெரிய படத்தை இயக்க ஷங்கரை தான் அழைக்க வேண்டும் என்றாராம். அதை கேட்ட ரஜினியோ, ஷங்கர் என் மீது கோபத்தில் இருக்கிறார். என்னை வைத்து படம் பண்ண மாட்டாராம் என்றாராம்.
ரஜினி சொன்னதை கேட்ட சரவணன், ஷங்கரிடம் பேசி சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாரை நடிக்க வைத்திருக்கிறார். சிவாஜி படத்தில் வேலை செய்தபோதே ஷங்கரை பற்றி புரிந்து கொண்டார் ரஜினி. மேலும் சூப்பர் ஸ்டாரை தெரிந்த பிறகு அவர் மீது மரியாதை ஏற்பட்டிருக்கிறது ஷங்கருக்கு. ரஜினி மீது ஷங்கர் கோபப்பட்டது ஏ.வி.எம். சரவணன் பேட்டி ஒன்றில் சொல்லித் தான் தெரிய வந்தது. தற்போது அது பற்றி பேசப்படுகிறது.ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
Listen News!