சிம்பு ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான படம் ‘வெந்து தணிந்தது காடு’. 'மாநாடு' படத்தின் பிரம்மாண்ட கம்பேக்கிற்கு பின்னர் கெளதம் மேனன் இயக்கத்தில் இந்தப்படத்தில் நடித்தார் சிம்பு. இவ்வாறுஇருக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் 50ஆவது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்த காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகின்றது. விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், கன்னட திரைப்படமான காந்தாரா மற்றும் தற்போது வெளியாகியிருக்கும் லவ் டுடே வரை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்கள் வித விதமான திரைப்படங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் முன் ஒருவித பயத்தில் இருந்தேன். ஏனென்றால் வழக்கமான ஹீரோவை முன்னிறுத்தும் படமாக இல்லாமல் இப்படம் இருந்தது. முத்துவாக நடிப்பதற்கு நான் அதிகம் மெனக்கெட்டேன். ஆனால், மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க தொடங்கியிருப்பதால், அந்த ரசனை என் பயத்தை போக்கி படத்தை வெற்றியாக்கியுள்ளது.
அத்தோடு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். படம் செய்துகொண்டிருக்கும்போது நிறைய அப்டேட்ஸ் கேட்கிறீர்கள். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு தயாரிப்பாளரோ, இயக்குநரோ, நடிகரோ ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நிறைய மெனக்கெடுகிறோம்
தினமும் நீங்கள் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தால்; தவறான முடிவு எடுக்க வாய்பு இருக்கிறது. அதனால் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களின் முதல் வேலை. எனவே எங்களுக்கு அந்த ஸ்பேஸ் கொடுத்தால்தான் நல்ல படங்கள் வரும். அத்தோடு அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் எல்லா ரசிகர்களும் ஒரு கதாநாயகனை தலை மேல் தூக்கி வைப்பார்கள். நான் எனது ரசிகர்களை தலை மேல் தூக்கி வைக்க ஆசைப்படுகிறேன். என் படத்துக்கு மட்டுமில்லை. அனைத்து படங்களுக்கும் அப்டேட்ஸ் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதை பத்து தல பட இயக்குநர் சொல்ல சொன்னார்” என்று தெரிவித்துள்ளார் சிம்பு. அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!