சர்ச்சை நாயகியான நடிகை கங்கனா ரனாவத் பிரம்மாஸ்திரம்' படத்தையும், அதன் இயக்குநர் அயன் முகர்ஜியையும் கடுமையாக விமர்சித்தது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் 'பிரம்மாஸ்திரம்'.இப்படத்தினை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியிருந்ததோடு ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் வெளியானது.
மூன்று பாகமாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 'பிரம்மாஸ்திரம்' படத்தையும், அதன் இயக்குநர் அயன் முகர்ஜியையும் நடிகை கங்கனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், “யாரெல்லாம் இயக்குநர் அயன் முகர்ஜியை மேதை என்று சொன்னார்களோ, அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். 12 ஆண்டுகள் இப்படத்திற்காக அவர் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.
14 ஒளிப்பதிவாளர்களை மாற்றியிருக்கிறார். 400 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, 85 உதவி இயக்குநர்களை மாற்றியிருக்கிறார். இந்த படத்திற்காக ரூ. 600 கோடி நாசம் செய்திருக்கிறார். பாகுபலி கொடுத்த வெற்றியின் காரணமாக ஜலாலுதீன் ரூமி என்ற படத்தின் பெயரை சிவா என்று மாற்றி மத உணர்வுகளைத் தூண்ட முயன்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கங்கனா இவ்வாறு பேசியது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அத்தோடு கங்கனா ரனாவத் இது தவிர இன்னும் பல சர்ச்சையான விடயங்களைக் கூறி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!