தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் தாணு. விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய புதுப்பாடகன் படம் நூறு நாள்கள் ஓடின. அதேபோல் அந்தப் படத்துக்கு இசையமைத்ததும் கலைப்புலி தாணுவே. இப்படி பல முகங்கள் கொண்ட தாணு கடைசியாக நானே வருவேன் படத்தை தயாரித்திருந்தார். அடுத்ததாக வாடிவாசல் படத்தை தயாரிக்கிறார்.
கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கு அனைத்து நடிகர்களுமே விருப்பப்படுவார்கள். ஏனெனில் அந்த பேனரில் நடித்தால் ஒரு கௌரவம் என்றே கருதப்பட்டது. நிலைமை இப்படி இருக்க பிரபுதேவாவின் அப்பாவான சுந்தரம் மாஸ்டர் ஒருமுறை தாணுவின் அலுவலகத்துக்கு சென்று, 'தாணு நீங்கள் பிரபுதேவாவை வைத்து படம் ஒன்று எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்திருக்கிறார். தாணுவும் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டார்.
இதனையடுத்து இயக்குநர் சசி சொல்லாமலே கதையை தாணுவிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டுவிட்டார். ஆனால் ஒரு டிசைனில் கலைப்புலி தாணு பெயரை இரண்டாவதாக போட்டதை பார்த்து கோபமான பிரபுதேவா அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தாணு நேரடியாக பேசியும் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை பிரபுதேவா. இதனையடுத்து அந்தப் படம் வேறு ஒரு தயாரிப்பு பேனரில் லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில்தான் சபா என்ற இயக்குநர் விஐபி படத்தின் கதையை கூற தாணுவும் தயாரிக்க ஒத்துக்கொண்டார். பிரபுதேவாவும் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். அந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது அனைவரும் அறிந்தது. சிம்ரன், ரம்பா, பிரபுதேவா, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது லைலாதானாம்.லைலாவும் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டாராம். அவருக்கு பாம் க்ரோ ஹோட்டலில் ரூம் போடப்பட்டிருக்கிறது. படத்தின் பூஜை போடப்பட சில நாள்கள் இருக்கும்போது லைலாவுக்கான அட்வான்ஸை தனது மேனேஜர் மூலம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தாணு.
ஆனால் அதை வாங்க மறுத்த லைலா, ஏன் இதை உங்க தயாரிப்பாளர் வந்து கொடுக்கமாட்டாரா. ஹீரோயினை மதித்து பார்க்காதது என்ன புரொடக்ஷன் கம்பெனி என கேட்டிருக்கிறார். இந்த விஷயம் கலைப்புலி தாணுவின் காதுகளுக்கு போக, இந்த பொண்ணு ஆரம்பத்துலயே பிரச்னை பண்ணுது அவங்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம். இதனை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் தாணு. மேலும் அந்த பேட்டியில் எதுக்கு ஹோட்டலுல போய் பார்த்துக்கிட்டு என்று நினைத்துதான் அன்றைய தினம் நான் போகவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Listen News!