நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ’இங்க நான் தான் கிங்கு’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் சந்தானத்திற்கு ஒரு வெற்றி படமாக அமையுமா? அல்லது ஏமாற்றம் அளிக்குமா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
மேட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலை செய்யும் சந்தானத்திற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால் சொந்த வீடு இருந்தால் தான் பெண் கொடுப்போம் என்று பெண் வீட்டார்கள் கூறும் நிலையில் 25 லட்சம் கடன் வாங்கி அபார்ட்மெண்ட் வீடு வாங்குகிறார். திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் இருந்து 25 லட்சம் வரதட்சணையாக வாங்கி வீட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட நிலையில் ஒரு ஜமீன்தான் குடும்பத்தைச் சேர்ந்த பெரும் பணக்கார பெண் ஒருவரை சந்தானத்திற்கு திருமண தரகர் காட்டுகிறார்.
பெண் பார்க்கும் படலம் முடிந்த பிறகு பெண்ணின் வீட்டினர் மூன்று நிபந்தனைகள் விதிக்கின்றனர். ஒன்று மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு இருக்க வேண்டும், இரண்டாவது அவர் அனாதையாக இருக்க வேண்டும், மூன்றாவது தங்களுடன் ஒரே குடும்பமாக வாழ தயாராக இருக்க வேண்டும் என்ற இந்த மூன்று நிபந்தனைக்கும் ஓகே சொல்லி ஜமீன்தார் மகளை சந்தானம் திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நினைத்தது எதுவுமே நடக்காமல் எல்லாமே தலைகீழாக மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ’இங்கு நான் தான் கிங்கு’.
சந்தானம், பால சரவணன், தம்பி ராமையா ஆகியவர்களின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிப்பு வர வைக்கும் வகையில் உள்ளது. அதேபோல் முனிஷ்காந்த், சேசு, மாறன் உள்ளிட்டவர்களின் காமெடியும் சூப்பராக உள்ளது.
நாயகி பிரியமாலா அழகாகவும் இருக்கிறார், நன்றாகவும் நடிக்கிறார், நடனமும் ஆடத் தெரிந்தவர் போல் தெரிகிறது. தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை. இயக்குனர் ஆனந்த் நாராயணன் எப்படி கோட்டை விட்டுவிட்டார் என்று தெரியவில்லை. டி இமான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக அமைத்துள்ளார். மொத்தத்தில் இந்த படம் வார இறுதியில் குடும்பத்தோடு சென்று சிரிக்கும் வகையில் இருக்கும் ஒரு படம் என்பதும், லாஜிக்கை மறந்துவிட்டு கவலையில்லாமல் இரண்டரை மணி நேரம் சிரிக்கலாம்.
Listen News!