• Nov 19 2024

நடிகை ஷாலினியின் தங்கை இவ்ளோ அழகாக ஓவியம் வரைவரா? சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாம்லியின் படைப்புகள்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. ஆகியவற்றின் காரணமாக அவர் ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.அவர் வரைந்த ஓவிய படைப்புகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமான சட்டகத்தில் பொருத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார். ‌


 இவரது படைப்புகளில் இடம்பெறும் பெண்கள்.. தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன. சில படைப்புகளில் பெண்கள் தங்களுடைய சமூக தளைகளிலிருந்து விடுபட்டு, இலட்சியத்தை நோக்கி நகரும் வகையில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஓவியக் கலைஞர் ஷாம்லி தன்னுடைய படைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாகவும், சமூகத்தில் எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிப்பவர்களாக இடம் பிடித்திருக்கிறார்கள்.

மேலும் இவர் பயன்படுத்தும் கோடுகள், வளைகோடுகள், வண்ணங்கள், வரையறைகள்... அனைத்தும் இவரது தனித்துவமான அடையாளத்தை உணர்த்துவதுடன், பெண்மையின் வலிமையையும், அவர்களிடம் மறைந்திருக்கும் புதிரான ஆற்றலையும் வலியுறுத்துவது போல் உருவாக்கியிருக்கிறார்.

இவரது படைப்புகளை பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் 2019 ஆம் ஆண்டில் கண்காட்சியாக வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் தன்னுடைய படைப்புகளை கண்காட்சியாக இடம்பெற வைத்திருக்கிறார்.

மேலும் கடுமையாக உழைத்து உருவாக்கிய படைப்புகளை துபாயில் உள்ள வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் அறுபது நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

 சர்வதேச பார்வையாளர்களை வெகுவாக கவரக்கூடிய துபாய் உலக வர்த்தக மையத்தில் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நான்கு நாள் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற இவரது படைப்புகளை பார்வையிட்ட பார்வையாளர்கள், இவரின் திறமையை வியந்து பாராட்டியதுடன், தங்களுடைய எண்ணங்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஷாம்லி.. வளர்ந்து திரைத்துறையில் மட்டுமல்லாமல் தன்னுடைய கவனத்தை ஓவியம், நாட்டியம் போன்ற கலை வடிவங்களிலும் செலுத்தி, இன்று சர்வதேச அளவிலான ஓவியக் கலைஞராக தனித்துவமான அடையாளத்தை பெற்றிருப்பது.. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என திரையுலகினர் ஷாம்லியை கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement

Advertisement