• Nov 14 2024

புறக்கணிக்கப்பட்டாரா அறிவு.. பாடகி 'தீ'யின் விளக்கம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெருக்குரல் அறிவின் வரிகளில் பாடகி தீ மற்றும் அறிவு ஆகியோர் குரலில் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் கடந்த ஆண்டு ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்ற சுயாதீன பாடல் வெளியானது.

அந்தப் பாடல் இந்தியா மட்டும் அல்லாது உலகெங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக பாடல் வரிகளை பலரும் பாராட்டி அறிவுக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதனையடுத்து Rolling Stone India என்ற ஆங்கில தளத்தில் இப்பாடலை பாராட்டும் வகையில் பதிவு ஒன்று போடப்பட்டது. ஆனால் அதில் தெருக்குரல் அறிவின் பெயர் இடம்பெறாதது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்தச் சூழலில் கடந்த 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இந்தப் பாடலை தீ மற்றும் மாரியம்மாள் இணைந்து பாடினர். அப்போதும் அறிவின் பெயர் இடம்பெறாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலைமை இப்படி இருக்க அறிவு இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பாடலை எழுதியது, பாடியது, கம்போஸ் செய்தது மற்றும் பெர்ஃபார்மன்ஸ் செய்தது என எல்லாமே செய்தது நான்தான். யாரும் எனக்கு இதற்கு இசையையோ, ஒரு பாடலை வரியையோ தரவில்லை. இப்போது இந்த பாடல் பிரபலமாக இருப்பதற்கு கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் இரவு பகல் என பாராமல் கண் விழித்து தூங்காமல் உழைத்திருக்கிறேன்” என பல்வேறு விஷயங்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் கலைஞர்களுக்கு பக்கபலமாக நான் எப்போதும் நின்றிருக்கிறேன். அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எஞ்சாய் எஞ்சாமி பாடல் குழுவின் கூட்டு முயற்சி என்று சந்தோஷ் நாராயணன் கூறியிருந்தார்.

இந்நிலையில்,பாடகி தீ தனது சார்பில் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். மேலும் அதில், ரோலிங் ஸ்டோன் இந்தியா அட்டைப்படம் தொடங்கி செஸ் ஒலிம்பியாட் வரை நடந்த அனைத்து சர்ச்சைக்கும் விளக்கம் அளித்துள்ளார். அதில், எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன்.

அத்தோடு பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் நான் தெரிந்துகொண்டேன். மேலும் அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டுமென விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன.

மேலும் கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் (தீ மற்றும் ஷான்) அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கானதோ அல்லது நீயே ஒலி பாடலுக்கானதோ அல்ல.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அத்தோடு அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது. எஞ்சாயி எஞ்சாமி பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது என்று பாடகி தீ நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement