தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று முன்தினம் காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராகவும் உதவும் குணம் கொண்டவராகவும் திகழ்ந்த மயில்சாமியின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மயில்சாமியின் மரணம் குறித்து பிரபல தொலைக்காட்சியில் பேசிய மருத்துவர்கள் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். அதாவது "சாதாரணமாகவே ஒவ்வொருவரும் ஏழரை மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும், இதய பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் 8 மணி நேரம் தூங்க வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
மேலும் "அதிக நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பது, அதிக ஸ்ட்ரெஸில் இருப்பது மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும்" எனவும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது "இதய பிரச்சனை உள்ளவர்கள் பழக்கம் இல்லாத வகையில் உடம்புக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாக உடற்பயிற்சி செய்வதும் மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு "திடீர் திடீரென அதிக சத்தம் வரும் இடங்களில் இருப்பதும் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர வழி வகுக்கும்" என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே இதய பிரச்சனை இருந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுக்க மயில்சாமி கண் விழித்திருந்தது கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் கண் விழித்தமையினால் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கின்றது என்ற விடயமானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!