’தக்லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு நடிக்க எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேற்று நடந்த சினிமா விழாவில் சிம்பு பிரச்சனை முடிந்து விட்டதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு ஒப்புக்கொண்டபடி சிம்பு நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு ’தக்லைஃப்’ படத்தில் நடிக்க கூடாது என்றும் தன்னுடைய தயாரிப்பில் 'கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த நிலையில் அந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் ’தக்லைஃப்’ படத்தில் நடிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். மேலும் சிம்பு நடிப்பதற்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் எப்படி ’தக்லைஃப்’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் நேற்று சினிமா விழா ஒன்றில் ஐசரி கணேஷ் கலந்து கொண்ட நிலையில் சிம்பு தன்னுடைய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அதனால் பிரச்சனை முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து தன்னுடைய வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு ரஜினி ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ’கூலி’ படத்தில் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!