உதயநிதியின் கடைசிப் படமாக சொல்லப்படும் மாமன்னன் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது.
இவ்விழாவில் தேவர் மகன் படம் குறித்த தனது பார்வையை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசினார்.
அவரின் இந்தப் பேச்சு கமல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்போது வரை சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் தேவர் மகன் படத்தின் பாதிப்பிலோ அல்லது அதற்கு பதில் கூறுவதாகவோ மாமன்னன் உருவாகவில்லை என மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துவிட்டார்.
தேவர் மகன் படத்தில் வரும் வடிவேலுவின் இசக்கி கேரக்டர் தான் மாமன்னன் என்பதும் உண்மையில்லை எனக் கூறிவிட்டார். இந்நிலையில், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில், அவர் மாரி செல்வராஜுக்கு கோபம் மட்டும் இருந்தால் போதாது, நியாயமும் இருக்க வேண்டும் என பேசியது வைரலாகி வருகிறது.
அதாவது, "மாமன்னன் படத்தை வாழ்த்துவதற்காக இங்கு வரவில்லை, ஏனெனில் ஏற்கனவே படத்தை பார்த்துவிட்டதால் அது வெற்றிப் பெற வேண்டும். மாமன்னனின் குரல் எல்லோருக்கும் கேட்க வேண்டும், இப்படியான குரல் இன்னும் அதிகம் உள்ளது. அவையெல்லாம் இப்பதான் கேட்க ஆரம்பித்துள்ளது" எனக் கூறியுள்ளார். மேலும், "மாமன்னன் படம் மாரியின் அரசியல் இல்லை, இது நம்ம அரசியல், அப்படித்தான் இருக்க வேண்டும்... வருங்கால இந்திய அரசியலுக்கு மாமன்னன் மாதிரியான படங்கள் தேவை" எனக் கூறினார்.
அதேபோல், மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்தும் கமல்ஹாசன் பேசியிருந்தார். அதில், "எதிர்தரப்பு என்ற ஒன்றை நிர்ணயித்துக் கொள்ளாமல் இது நிகழும் நிஜம், மாறவேண்டும் என்பதற்காக எதிர் தரப்புக்கும் ஒரு சமமான இடத்தை கொடுக்க முயற்சி செய்வதாக" மாரி செல்வராஜ்ஜை பாராட்டினார்.
மேலும், "கோபத்தில் இப்படியாக சிந்திக்க முடியாது, இது உங்கள் மனதின் சமநிலையை காட்டுகிறது. சண்டை போடும் போது கோபம் மட்டும் இருந்தால் போதாது, அதில் நியாயம் வேண்டும். அது உங்களிடம் இருப்பதாக" மாரி செல்வராஜ்ஜை பாராட்டி, தேவர் மகன் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்.
Listen News!