நடிகர் மயில்சாமி சில நாட்களுக்கு முன் அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.
நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.
இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்று தணியும்', சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை யுவன் அளித்துள்ளார். அந்த பேட்டியில் நடிகர் மயில்சாமி குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். யுவன் பேசியதாவது, "சிவராத்திரி அதுவுமா அவர் விருப்பப்பட்டு கும்பிடுறவரு. எனக்கென்னவோ இவர் போனது மாதிரி தெரியலை. சிவன் கூப்பிட்டு போனது மாதிரி தான் தோனுச்சு. முதல் முறை அட்டாக் வந்தது எப்போனா? கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி. கார்த்திகை தீபம் அன்று, திருவண்ணாமலை தீபத் திருவிழா அப்போவே அவருக்கு நெஞ்சு வலி வந்துருச்சு. விழா முடிந்ததும் இவரே ஒரு ஆட்டோ பிடித்து 7:30 போல எங்கள் பெரியம்மா, பெரியப்பா மகன் பிரவீன் திருவண்ணாமலைல மருத்துவர், அவரோட மருத்துவமனையில் போய் அப்பா அட்மிட் ஆகிட்டாங்க. பின்னர் அங்க இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போ அவர் உயிரை காப்பாற்றியாச்சு. அன்றும் சிவனுக்கு உகந்த நாள். அப்பவே அவரை கூப்பிட்டு போக சிவன் முயற்சி செய்து இருக்கார். இந்த வருடம், போன வருடம் ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார். ஆனால் அவருடைய தெரிந்த நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் எல்லாம் கார்த்திகை தீப திருநாள் நெருங்க நெருங்க, இவர் கேட்காமலே தர ஆரம்பிச்சுட்டாங்க. அந்த பொருளை எல்லாம் கொடுக்க போனார். இந்த வருடம் சிவராத்திரிக்கு நிகழ்ச்சி நடத்தவும், உணவுக்கும் இவருக்கு பணம் வந்திருச்சு. அதனால் தான் அவர் பணத்தை பிரிச்சு கொடுக்க கோயிலுக்கு போனார். ஆனால் நல்ல படியா வீட்டுக்கு வந்துட்டார். வீட்டிற்கு வந்த பிறகு தான் இப்படி ஆச்சு." என யுவன் பேசியுள்ளார்.
Listen News!