பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜவான்.ஆக்ஷன் ஜானரில் உருவாகிய இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்.
ஜவானுக்கு இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி, இம்மாதம் 7ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் மாஸ் காட்டியது. முதல் நாளில் 125, இரண்டாவது நாளில் 109, மூன்றாவது நாளில் 140, 4வது நாளில் 156 கோடி என, முதல் நான்கு நாட்களும் 100 கோடிக்கும் குறைவில்லாமல் வசூலித்தது.
அதன்பின்னர் வசூலில் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனில் ஜவான் புதிய சாதனை படைத்து வந்தது. இதனால், விரைவில் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் ஜவான் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை தற்போது சாதித்துக் காட்டியுள்ளது ஜவான். அதன்படி இதுவரை 1004 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் முதன்முறையாக ஆயிரம் கோடி வசூலில் இணைந்த கோலிவுட் இயக்குநர் என்ற பெருமை அட்லிக்கு கிடைத்துள்ளது. அதேநேரம் இது அட்லியின் வெற்றி கிடையாது எனவும், ஷாருக்கான் நடிக்கவில்லை என்றால், ஜவான் 200 கோடி ரூபாய் கூட வசூல் செய்திருக்காது என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!