ஆஸ்கருக்கு இந்த முறை ஏகப்பட்ட இந்திய படங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்தியா சார்பில் தி லாஸ்ட் ஷோ படம் மட்டுமே அனுப்பப்பட்ட நிலையில், தனியாக ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் ஃபைல்ஸ், காந்தாரா, இரவின் நிழல், ராக்கெட்ரி உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு படங்களை அனுப்பி உள்ளன. ஆனால், இதில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல பிரிவுகளில் போட்டியிட தேர்வாகி உள்ளது.
வரும் ஜனவரி 24ம் தேதி அதிகாலை ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த முறை ஆஸ்கர் விருது வென்ற ரிஸ் அகமத் மற்றும் ஆலிசன் வில்லியம்ஸ் இந்த ஆஸ்கர் அறிவிப்பை வெளியிட உள்ளனர்.ஆர்ஆர்ஆர் படத்தை ப்ரோமோட் செய்ய எந்தளவுக்கு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் ஒவ்வொரு ஊருக்கும் சுற்றித் திரிந்தாரோ அதை விட பல மடங்கு தற்போது ஒவ்வொரு சர்வதேச விருது விழாவுக்கும் இருவரையும் அழைத்து சென்று வருகிறார் ராஜமெளலி. எப்படியாவது இந்த முறை ஆஸ்கரை அள்ளி விட வேண்டும் என பெருமுயற்சி செய்து வருகிறார்.
ஆஸ்கர் போட்டியில் சிறந்த நடிகர் பிரிவில் ஜூனியர் என்டிஆர் பெயர் அதிகம் அடிபட்டு வருகிறது. யுஎஸ்ஏ டுடே, வெரைட்டி என பல ஹாலிவுட் நாளிதழ்களும் ஆஸ்கர் போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதையே ஜூனியர் என்டிஆர் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், கண்டிப்பாக ஆஸ்கர் நாமினேஷனில் ஜூனியர் என்டிஆர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NTRForOscars ஹாஷ்டேக்கை போட்டு ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஜூனியர் என்டிஆர் தான் ஆர்ஆர்ஆர் படத்தில் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நடிகர் ராம்சரண் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த பட்டியலில் அவர் தேர்வு செய்யப்படுவாரா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர். எப்படி இருந்தாலும் வரும் ஜனவரி 24ம் தேதி ஆஸ்கர் நாமினேஷன் அறிவித்ததும் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கும் என நம்பலாம்.
நாட்டுக் கூத்து பாடலுக்கு இசையமைத்து இசையமைப்பாளர் கீரவாணி கோல்டன் குளோப் விருதை பெற்றதை போல ஆஸ்கர் விருதும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஏதாவது ஒரு பிரிவில் கிடைக்கும் அல்லது ஆஸ்கர் நாமினி என்கிற அந்தஸ்த்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!