உலகையோ உலுக்கிய கோர விபத்து தான் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டமை. நேற்று இரவு எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 1000-திற்கும் மேற்பட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து சரிந்து, அருகில் இருந்த அடுத்த தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் பயணிகள் ரயில் மீது மோதி தடம் புரண்டது. படுபயங்கரமான இந்த விபத்தில் பயணிகளின் கூச்சல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் விரைந்து வந்து உதவியுடன் ரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இதையடுத்து, ரயில் விபத்து குறித்த தகவல் பரவி தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினர் விபத்து பகுதிக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப்பணி 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து ஏற்பட்டதால் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் கூறியதாவது ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம் என கமல் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!