தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சினிமாவில் பயணித்து வருகின்றார். நடிப்பில் உலகநாயகனாக திகழ்ந்து வருகின்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலிலும் எண்ட்ரி கொடுத்தார்.
அந்தவகையில் இவர் 'மக்கள் நீதி மையம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாது அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார் உலகநாயகன்.
அதாவது கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளராக களமிறங்கி போட்டியிட்ட கமல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.
தனது முதல் தேர்தலிலேயே தோல்வியை சந்தித்தாலும் துவண்டுவிடாது தொடர்ந்து அரசியல் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். அத்தோடு மக்கள் நீதி மையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தியும் வருகின்றார்.
அந்த வகையில் சாதனை நிகழ்த்திய பெண்களை கௌரவிக்கும் வகையில், 'மகளிர் சாதனையாளர் விருது விழா' ஆனது மக்கள் நீதி மையம் சார்பில் சமீபத்தில் கோவையில் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனும் கலந்துகொண்டு பல்வேறு துறைகளிலும் சாதனையாளர்களாக திகழ்ந்து வருகின்ற பெண்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அதில் கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற 105 வயது மூதாட்டிக்கு 'தாய் பூமி' என்ற விருதினை வழங்கி சிறப்பித்திருந்தார். இந்த மூதாட்டி இந்த வயதிலும் இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகின்றார்.
இதன் காரணமாகவே இவரை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. மக்கள் நீதி மையத்தின் கட்சித் தலைவர் என்ற ரீதியில் கமல்ஹாசன் இவ்விருதை வழங்கி கௌரவித்ததோடு அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கின்றார்.
Listen News!