• Nov 14 2024

சர்ச்சை கருத்தை கூறிய கனல் கண்ணன் விவகாரம்-நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்த கனல் கண்ணன், தற்போது அரசியல் பக்கம் கரை ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், பெரியார் சிலை குறித்து அவர் பேசியிருந்த கருத்து, கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி, சென்னை மதுரவாயலில் ஆக 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார்.

கனல் கண்ணனின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். 

மேலும் அதில் இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், இந்த வழக்கில் முன் ஜாமின் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 11ம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன், ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.

எனினும் இதையடுத்து ஜாமீன் வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்னன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். கோயிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது" என தெரிவித்திருந்தார்.

கனல் கண்ணனின் இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்றுஇ விசாரணைக்கு வந்தது, அப்போது, "தேவையற்ற கருத்துகளை யூ.டியூப்களில் பேசுவது ஃபேசனாகிவிட்டது என கூறினார். மேலும், ஒரு கட்சியில் இருக்கும்போது மாற்று கொள்கை உடையோர் குறித்து ஏன் பேச வேண்டும்" என கனல் கண்ணனுக்கு கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், 4 வாரங்களுக்கு தினமும் காலையும் மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளார்.


Advertisement

Advertisement