ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் இருந்து ஒதுங்கிய அவர் ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனையடுத்து அவரை மீண்டும் தலைவி படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தார் ஏ.எல்.விஜய்.
தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து உருவான படம்தான் தலைவி. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் கங்கனா ரணாவத். இள வயது ஜெயலலிதாவாக கங்கனாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதேசமயம் அரசியலுக்குள் நுழைந்த பிறகு இருக்கும் ஜெயலலிதாவாக கங்கனாவின் நடிப்பு பேசப்பட்டாலும் அவரது லுக் ஒத்துவரவில்லை என ரசிகர்கள் கூறினர்.
இந்தச் சூழலில் கங்கனா ரணாவத் மீண்டும் தமிழில் களமிறங்கியிருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. சந்திரமுகி பாகம் ஒன்றில் ஜோதிகா ஏற்றிருந்த கதாபாத்திரத்தை இதில் கங்கனா ரணாவத் ஏற்றிருக்கிறார். ஆனால் ஜோதிகாவின் நடிப்பை இவரால் ஈடு செய்ய முடியுமா என இப்போதே பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இருப்பினும், அவரது நடிப்பை தன்னால் ஈடு செய்ய முடியாது என சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ஓபனாக தெரிவித்திருந்தார் கங்கனா ரணாவத். அவருக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அதுகுறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரொம்பவே உருக்கமாக பதிவிட்டிருந்தார் .
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் கங்கனா ரணாவத். படத்துக்கு எமர்ஜென்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்தப் படம் உருவாகிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில் எமர்ஜென்சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜிவி பிரகாஷ், "கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரமாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கீபோர்டில் அவர் இசையமைப்பது போலவும் அதனை கங்கனா ரணாவத் ரசிப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
Listen News!