இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கியுள்ள திரைப்படம் தான்'பபூன்'. இப்படத்தில் கதாநாயகனாக வைபவ் நடித்துள்ளார்.கதாநாயகியாக நடிகை அனகா நடித்துள்ளார்.இவர்களுடன் ஜோஜூ ஜார்ஜ், நரேன், அந்தக்குடி இளையராஜா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வழங்குவதோடு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும், இந்த திரைப்படம் வரும் 23 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது பேசிய கார்த்திக் சுப்புராஜ், ஆரம்பத்தில் 'Fanboy' திரைப்படங்கள் குறித்தும், விக்ரம் திரைப்படம் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், “விக்ரம் படம் ரொம்ப பிடித்திருந்தது. சூப்பராக இருந்தது. லோகேஷ் கமல் ஃபேன் என்பது முன்னாடியே தெரியும். முன்னதாக, என்னிடம் லோகேஷ் பேசிக் கொண்டிருந்த போது பாடல்கள் இல்லாமல் விக்ரம் படம் எடுக்க போகிறேன் என கூறினார். ஃபேன் பாயாக இருந்துட்டு இப்படி பண்ணாதீங்க. 'அண்ணாத்த ஆடுறாரு' அதை மாதிரி ஒரு பாட்டு வைங்க என நான் கூறினேன்.
ஆனால், கடைசியில் படத்தில் பாடல் இருந்தது” என்றார்.மேலும் ஜிகர்தண்டா 2 குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், “இறைவி முடிந்ததும் இந்த கதைக்கான ஐடியா ஒன்று இருந்தது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இது இருக்காது. முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்” என கூறினார்.
இது தவிர, ஜகமே தந்திரம், மஹான் உள்ளிட்ட தனது இயக்கத்தில் உருவான படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது பற்றியும், குறும்படங்கள் இயக்குவது தொடர்பாகவும் நிறைய தகவல்களையும் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், “நான், லோகேஷ், நலன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் குறும்படங்கள் செய்து தான் கற்றுக் கொண்டோம். திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற டெக்னிக்குகளையும் தெரிந்து கொண்டோம். ஆனால், நம்மால் ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு வந்து விட்டோமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை தான் இயக்குநராக ஆக வேண்டும் என விரும்புவர்கள் சரியாக எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!