ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்கின்றனர். லால் சலாம் படத்திற்கு இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகின்றன. இதற்காக விமானத்தில் மும்பை சென்ற ரஜினியின் புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன. மேலும், ரஜினியின் கேரக்டர் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 18 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று (மே 8) நள்ளிரவு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் தோற்றம் படு மிரட்டலாக வெளியாகியுள்ளது.
மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள லால் சலாம் போஸ்டரில், ரஜினி டான் லுக்கில் செம்ம மாஸ்ஸாக மிரட்டுகிறார். "மும்பையில் இருந்து திரும்பிய மொய்தீன் பாய் எனவும், சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக" என இஸ்லாமியர்கள் வணக்கம் தெரிவிக்கும் வாசகமும் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
சிவப்பு நிற தொப்பி, லேசான தாடி, கூலர்ஸ் என மாஸ் லுக்கில் ராஜநடை போட்டு வருகிறார் ரஜினி.பாட்ஷா படத்திற்குப் பிறகு ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் லால் சலாம் படத்திலும் ரஜினி டான் கேரக்டரில் தான் நடிக்கிறார் என்பது போஸ்டரிலேயே உறுதியாகியுள்ளது.
லால் சலாம் படத்தில் ரஜினியின் காட்சிகள் மொத்தமே 20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், ரஜினி திரையில் இருக்கும் வரை அது ரசிகர்களுக்கு மாஸ் எனர்ஜி கொடுக்கும் என கூறப்படுகிறது. லால் சலாம் படத்தைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170-ல் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்திலும் ரஜினி முஸ்லிம் கேரக்டரில் தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
Listen News!