தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உச்சி மாநாடு சென்னையில் இருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. இதில் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டு பேசிவருகின்றனர். நேற்றுகூட இயக்குநர் வெற்றிமாறன் தென்னிந்திய சினிமாக்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் மணிரத்னமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், " ஹிந்தி திரையுலகம் தன்னை பாலிவுட் என்று குறிப்பிடுவதை நிறுத்தினால், இந்திய சினிமாவை வெளிநாடுகளில் உள்ளவர்கள் பாலிவுட் என்று அடையாளப்படுத்துவதை மக்கள் நிறுத்திவிடுவார்கள். கோலிவுட், பாலிவுட் என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை.
இந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக பார்ப்பது நல்லது" என பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் தில் சே (உயிரே), குரு, ராவணன் ஆகிய படங்கள் நேரடியாக ஹிந்தியில் வெளியானது . இப்படிப்பட்ட சூழலில் மணிரத்னம் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மணிரத்னம் இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படமானது ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால் படக்குழு தீவிரமான ப்ரோமோஷனில் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு தனி விமானம் மூலம் செல்லும் படக்குழு இப்போது மும்பையில் முகாமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!