மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம் மாமன்னன். இந்தப் படத்தில் வடிவேலு,பகத் பாசில்,கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார்,கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.
இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இப்படம் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் பிரச்சாரத் திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். உதயநிதியின் தந்தை மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து இருக்கிறார். இதுவரை நம்மை வயிறு வலிக்க வைத்த வடிவேலு, இந்த படத்தில் நம்மை மனம் உருக அழவைத்து இருக்கிறார். மண்ணுவாக வாழ்ந்து இருக்கிறார்.
நம்மால் ஒரு சாதிக்கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு நடுநிலையான எம்.எல்.ஏவாக இருக்கிறார் வடிவேலு. மேல் சாதியை சேர்ந்த ஒருவர் வடிவேலுவை சட்டமன்ற உறுப்பினராக்குகிறார். அவரது மறைவுக்கு பின் வடிவேலுவை பகத் பாசில் ஆட்டிவைக்கிறார். வடிவேலு எம்.எல்.ஏவாக இருந்தாலும் மாவட்ட செயலாளரான பகத் பாசில் முன் உட்காரக்கூடாது என்று எப்போதும் நின்று கொண்டே இருக்கிறார்.
இப்படத்தின் இடைவேளைக்கு பின் வெட்டு,குத்து, அடிதடி என கதை நகர்கிறது. இதையடுத்து, மேல் சாதியினரின் ஆதரவு இல்லாமல் வடிவேலு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகிறார். இதுதான் மாமன்னன் திரைப்படத்தின் கதை. இப்படத்தில் பாதி அரசியல், பாதி சாதி என அனைத்துக்காட்சியையும் முன்பே யூகிக்கக்கூடிய வகையில் இருக்கிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பேண்ட்,சட்டை போட்டுக்கொண்டு ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருக்கிறார். அதே போல வில்லனாக நடித்திருக்கும் பகத் பாசில் சாதி வெறிப்பிடித்தவராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் நடிப்பு, எகத்தாள சிரிப்பு, ஏளனப்பார்வை என அனைத்தும் நடிகர் நம்பியாரின் மறுபிறவிப்போல கண்முன் தெரிகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சும்மா அட்டகாசமாக இருக்கிறது. வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இருக்கும் அந்த ஸ்டைல் இந்த படத்தில் எந்த இடத்திலும் இல்லை. மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டது போல ஒப்பாரி பாடலை படம் முழுக்க வைத்து இருக்கிறார்
இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் மாரி செல்வராஜ், அவர் கதையில் வன்மத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார். ஒரு கிராமத்தில் நடக்கும் பிரச்சனையை கண்டும் காணாமல் சொல்லவேண்டும். ஆனால் மொத்தமாக ஒரு சாதிப்படமாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ் என்று பயில்வான் ரங்கநாதன் மாமன்னன் படத்தை விமர்சித்துள்ளார்.
Listen News!