கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
இந்த கதையினை திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ளார்.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதில் அவர் கூறியிருப்பதாவது, அரச நிர்வாகத்தில் பெண்களின் தலையீடு இருந்துள்ளது இப்படத்தில் தெரிகிறது. பெண்கள் காதலிப்பது ஒருவராகவும் கல்யாணம் செய்து கொள்வது ஒருவராகவும் இருந்துள்ளனர்.
இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார். வந்தியத் தேவன் பெண்களை கவருபவராகவும், அதே சமயம் பெண்களை மதிப்பவராகவும் உள்ளார். அரசகுல பெண்கள் கூறும் வேலைகளையும் செய்து வருகிறர். ஆதித்த கரிகாலனாக விக்ரம் அருமையாக சண்டை போடுகிறார். ஆதித்த கரிகாலனின் வீரம் தெரிகிறது.பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரின் நடிப்பு கம்பீரமாக உள்ளது. சித்து விளையாட்டுக்களிலும் சிறந்தவராக உள்ளார். பிரகாஷ் ராஜின் காட்சிகளில் அவர் குப்புற படுத்துள்ளார். அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலிகளை பொறுத்துக்கொண்டு அரச வேலைகளை செய்கிறார். அவருடைய நடிப்பும் கம்பீரமாக உள்ளது.
அடுத்து ஐஸ்வர்யா ராயும் த்ரிஷாவும் அழகாக இருக்கிறார்கள். இருவரும் நடிப்பால் போட்டி போட்டுக் கொண்டு வசப்படுத்துகிறார்கள். ஐஸ்வர்யா ராய் நந்தினியாக சோகத்தை தாங்கி கொண்டு நிற்கிறார்.
ஐஸ்வர்யா ராய் அழகு பசுமையாக காட்ட பல காட்சிகளில் மேக்கப் அதிகமாக போடப்பட்டுள்ளது. சில காட்சிகளில் அவர் நடிப்பு சரியில்லை, சில காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
பார்வைகளாலே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். இறுதியில் ஐஸ்வர்யா ராய் முழுக்க மனதில் நிற்கிறார். த்ரிஷாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கே எதிராக செயல்படுகிறார். அந்த காலத்தில் பெண்கள் அரசருக்கு தெரியாமலேயே நிர்வாகத்தில் தலையிட்டுள்ளனர் என்பது தெரிகிறது.
சோழர் கால பெண்கள் காதலுக்கு வலை வீசுவது போல் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் சோழர் கால கம்பீரத்தை பாருங்கள் என்று சொல்லலாமே தவிர, சோழர் கால பெண்களின் கற்பை பாருங்கள் என சொல்லமுடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” என காட்டமாக கூறியுள்ளார்.அந்த கால பெண்கள் கற்பு என்ற விஷயத்தில் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்த்தால் புரியும். அதை விமர்சிக்க முடியாது. அடுத்ததாக படத்தில் காமெடி என்றால் ஜெயராம்தான். ஆழ்வாருக்கு அடியான் நம்பி என்ற கதாப்பாத்திரத்தில் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதை போல கலகலப்பாக நடித்துள்ளார். படத்தில் காமெடி என்றாலே கார்த்தியும் ஜெயராமும்தான்.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. தோட்டா தரணியின் கலையும் அருமை. அந்தக் காலத்தில் உள்ள அரங்குகளை பிரமாண்டமாக அமைத்து கண்ணுக்கு விருந்தளித்துள்ளார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். புராதன படங்களில் உள்ள இசை இல்லை. பாடல்கள் சரித்திர படங்களுக்கு ஏற்றது போல் இல்லையோ என்று தோன்றுகிறது. வார்த்தைகள் கேட்கவில்லை என்ற குறையை சொல்லித்தான் ஆகவேண்டும்.
ஜெயமோகன் சிறப்பாக தனது வேலையை செய்திருக்கிறார். மணிரத்னம் எப்போதும் சுஜாதாவைதான் பயன்படுத்துவார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் ஜெயமோகன். மணிரத்னம் திரைக்கதையை அமைக்க சிரமப்பட்டிருக்கிறார்.பொன்னியின் செல்வனில் பல கதாப்பாத்திரங்கள் உள்ளன. 3 பெண்களுமே ராணிகளாகவும் இளவரசிகளாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். நடனம் கேரளத்து நடனம் போல் உள்ளது.
இந்த படத்தில் ராஜாக்கள், இளவரசர்கள், தளபதிகள் என அனைவருமே அயோக்கியன் என்று மணிரத்னம் சொல்லி இருக்கிறார். ஒரு கதாபாத்திரம் கூட நல்லவன் என்று சொல்லும் அளவுக்கு இல்லை.இப்படி தமிழகர்களை அவமானப்படுத்தும் ஒரு படத்தை மணிரத்னம் ஏன் இயக்கினார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. வந்தித்தேவன் கதாபாத்திரம் இவ்வளவு மோசமாக இருந்ததால் தான் எம்ஜிஆர் இந்த படத்தில் நடிக்கவில்லையோ என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.
மேலும், வயதான சரத்குமாரை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டாலும், அவரது மனதில் பல ஆண்கள் இருக்கிறார்கள் இது என்ன என்றே தெரியவில்லை. தமிழ் பெண்களை இழிப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டே கல்கி இந்த நாவலை எழுதினாரா… இல்லை தமிழகர்களை இழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மணிரத்னம் இந்த படத்தை எடுத்தாரா என்பது புரியவே இல்லை.சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் என்று நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இருந்ததை தவிடுபோடியாக்கிவிட்டார் மணிரத்னம். சேரர், சோழன், பாண்டியை அசிங்கப்படுத்துவதற்காவே கல்கி இந்த நாவலை எழுதினார் என்று அண்ணாவே அந்த காலத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனால், தான் திராவிட இயக்கத்தலைவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வனை ஆதரிக்கவே இல்லை. பல்வேறு கட்டங்களில் பல திராவிட இயக்கத் தலைவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை விமர்சித்தார்கள்.இதன் அடிப்படையில் தான் பேரறிஞர் அண்ணா, பொன்னியின் செல்வன் படத்தில் எம்ஜிஆரை நடிக்காதீர்கள், பொன்னியின் செல்வன் தமிழகர்களுக்கு விரோதமான நாவல் என்று சொன்னார். அதை மணிரத்னம் இன்று நிரூபித்துள்ளார். பொன்னியின் செல்வன் இரண்டு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்று பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.
Listen News!