தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், காமெடி நடிகருமான டி.பி. கஜேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இதனைத் தொடர்ந்து சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று கலந்து கொண்டு தங்களது அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் டி.பி. கஜேந்திரனின் நண்பரும் இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகரான மனோபாலாவிற்கு டி.பி. கஜேந்திரனின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் வீட்டிற்கு சென்று டி.பி. கஜேந்திரனின் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய மனோபாலா அதன் பிறகு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் மனம் உருகி பேசிய கருத்துக்கள் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது கடந்த சில நாட்களாக தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது திரைத்துறையை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வரிசையில் ஜூடோ ரத்தினம், இயக்குநர் கே. விஸ்வநாத், வாணி ஜெயராம், டி.பி. கஜேந்திரன் என பல பிரபலங்கள் மண்ணை விட்டு மறைந்து செல்வது நடிகர் மனோபாலாவை மனதளவில் சரியாகப் பாதித்துள்ளது.
இதனால் தொடர்ந்து பேசுகையில் "இதோட நிறுத்திக்க ஆண்டவா முடியல" என்று கூறி டி.பி. கஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பேசும் போது குமுறி அழுது விட்டார். அதுமட்டுமல்லாது "விசுவிடம் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே டி.பி. கஜேந்திரனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனை போல குடும்ப கதைகளை அழகாக கையாள தெரிந்த இயக்குநர் வெகு சிலர் மட்டும் தான் சினிமாவில் உள்ளனர்.
நான் அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் விஷ் பண்ணுவேன்.. பாலா பாலான்னு எப்போதும் உசுரவிடுவான். இப்படி இவ்வளவு சீக்கிரத்தில் போய் சேருவான்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல.. சினிமா துறையையே யாரோ கரம் வச்சு காலி பண்ணுவது போல அடுத்தடுத்த உயிரிழப்புகள் நடக்கின்றன தாங்க முடியல" என மனோபாலா தனது ஒட்டுமொத்த வேதனையையும் செய்தியாளர்கள் முன்பு கொட்டித் தீர்த்துள்ளார்.
Listen News!