நகைச்சுவை நடிகராக பெருவாரியான ரசிகர்களுக்கு அறியப்பட்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 69. காமெடி நடிகர்கள் விவேக், பாண்டு, மயில்சாமி என ஒவ்வொரு நடிகர்களாக உயிர் துறந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், மனோபாலாவின் மறைவு மீண்டும் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா கிளைமேக்ஸ் காட்சியின் போது பூணூல் மற்றும் சிலுவையை அறுக்கும் காட்சியை பாரதிராஜா வைத்ததை பார்த்து மிரண்டு போய் விட்டார். பெரியார் முன்னிலையில், தானும் தனது பூணூல் அறுத்து தீவிர நாத்திகவாதியாக மாறினேன் என சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், சமீப காலமாக பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் சாதிய தீண்டாமைகளுக்கு எதிராக படங்களை இயக்குவது ரொம்பவே பிடித்திருக்கிறது என்றார்.ஆனால், வயது ஆக ஆக எதிர்காலத்தை பற்றிய பயம் காரணம் ஆக மீண்டும் ஆன்மிக பாதைக்கே திரும்பி விட்டேன் என்றும், இப்போ நான் போகாத கோயிலே இல்லை என மனோபாலா பேசி உள்ளார். கண்ணதாசன் எப்படி திடீரென ஆன்மிக பாதைக்கு மாறினாரோ அதே போல எனக்கும் ஒரு மொமன்ட் வந்த நிலையில், ஆன்மிகத்தின் பக்கம் சாய்ந்து விட்டேன். ஆனாலும், சாதி, மத பாகுபாடுகளை ஒருபோதும் பார்க்க மாட்டேன்.
கஷ்டம் வரும் நேரத்தில் கடவுளை நினைத்துக் கொள்வேன். என்னையும் காப்பாற்று, என்னை சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்று கடவுளே என்று மட்டும் தான் வேண்டிக் கொள்வேன் என மனோபாலா அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
Listen News!