தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இழப்பு என்றால் அது காமெடி நடிகர் மயில்சாமியின் மரணம் தான். இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி பலருக்கும் உதவி செய்து பார்ப்பவர்கள் கண்ணுக்கு ஒரு கொடை வள்ளலாகவும் விளங்கி இருக்கின்றார்.
இந்நிலையில் மயில்சாமி இறப்பதற்கு முன்னர் நடித்த கடைசிப் படமான 'கிளாஸ்மேட்ஸ்' படத்தின் முதல் பாடல் 'கண்ணு முன்னே' வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் மயில்சாமியின் மகன்கள் இருவரும் கலந்துகொண்டு, அவர்களது அப்பாவின் நினைவுகளை கண்ணீர்மல்க பலர் முன் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மயில்சாமிக்கு நினைவேந்தலும் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இதில் மூத்த காமெடி நடிகர் செந்தில் உட்பட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர்.
அந்தவகையில் மூத்த மகனான அன்பு கூறுகையில் "அப்பா எப்போதும் எங்களை நல்ல நண்பர்களைப் போல நடத்துவார். அத்தோடு இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது வாழ்நாளில் மற்றவர்களுக்கு உதவுவதை ஒருபோதும் நிறுத்தியதே இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் அவருக்கு ரோல் மாடல். எங்களுக்கு எம்ஜிஆரை தெரியாது ஆனால், எங்கள் அப்பா மயில்சாமி உதவியதை பார்த்து நாங்கள் எம்ஜிஆர் யார் என தெரிந்துகொண்டோம்" என கண் கலங்கியவாறு கூறினர்.
மேலும் "பணம் இல்லாத நேரத்தில் யாரும் உதவிக்கேட்டு வந்தால், கடவுளிடம் சண்டை போடுவார். "எங்கிட்ட பணம் இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் என்னிடம் உதவிக் கேட்டு மத்தவங்கள அனுப்பி வைக்குற" என உரிமையோடு கடவுளிடம் கோபம்கொள்வார். அதேபோல், நாங்கள் ஆசைப்பட்டதெல்லாம் இருவருமே நல்ல நடிகர்களாக வருவதை அப்பா பார்க்க வேண்டும் என்பதை தான். அதுதான் நாங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை" எனவும் கவலையுடனேயே கூறினர்.
அத்தோடு அந்த நிகழ்வில் எப்போதும் மயில்சாமியுடனயே இருக்கும் சக்தி என்பவரை அவரது மகன்கள் அறிமுகம் செய்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து மேடையேறிய சக்தி, "மயில்சாமி கடைசியாக ஒரு படத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார். அதில், 25000 ஒருவருக்கும், எனக்கு கொஞ்ச பணமும், மிச்சம் இருந்த ஆயிரம் ரூபாயை அவரது மகன்களுக்கும் கொடுத்தார். எல்லாம் கொடுத்துவிட்டு கடைசியாக அவரது சட்டை பாக்கெட்டில் இருந்தது வெறும் 30 ரூபாய் தான்" எனக் கூறி கண்ணீர் வடித்தார்.
Listen News!