நடிகர் கவின் ’லிப்ட்’ ’டாடா’ மற்றும் ’ஸ்டார்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்த நிலையில் தற்போது அவர் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’பிளடி பெக்கர்’ ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’கிஸ்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்க்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக ஒரு படத்தில் அவர் கமிட்டாகி இருப்பதாகவும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கவினுக்கு ஜோடியாக நடிக்க அவர் இரண்டு நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது. ஒன்று கவினுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் தனக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்றும் இன்னொன்று தனது கேரக்டருக்கு ஹீரோ கேரக்டரை விட அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.
தயாரிப்பாளரிடம் ஆலோசனை செய்து பதில் கூறுவதாக இயக்குனர் கூறிய நிலையில் தயாரிப்பாளர் சம்பள விஷயத்தில் ஒப்புக்கொண்டதாகவும் , நயன்தாரா கேரக்டரை வலுவாக்குவது குறித்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் இயக்குனரிடம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து இயக்குனர் நயன்தாராவிடம் சென்று உங்கள் இரண்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன் என்று சர்ப்ரைஸ் கொடுத்தது தான் ஆச்சரியமாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருப்பது விஜய் நடித்த ’லியோ’ உட்பட சில படங்களுக்கு பாடல்களை எழுதிய விஷ்ணு எடாவன் என்பதும் இவர் லோகேஷ் கனகராஜின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!