கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'விக்ரம்'. இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். மேலும், நடிகர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருந்தார்.
இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு படம் பிளாக்பாஸ்டர் ஹிட்டாகவும் பதிவாகி இருந்தது.சமீபத்தில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அசத்தி இருந்த விக்ரம் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது.
இந்நிலையில், விக்ரம் திரைப்படம் 100 நாள் ஓடியதை கொண்டாடும் விதமாக, கோவை கே.ஜி திரை அரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், நடிகர் கமலும் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டு பேசிய கமல், "அடையாளம் தெரியாத குழந்தையாக களத்தூர் கண்ணம்மா படத்தில் தோன்றிய போது, போகும் இடங்களில் எல்லாம் நீதானா அந்த பிள்ளை என கேட்பார்கள். அது மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால், ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்த என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. 10 பேர் கூட கண்டு கொள்ளவில்லையே என்ற கவலை இருந்தது.
அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது என்னால் மட்டும் என நினைப்பது முட்டாள்தனம். அதற்கு பல பேர் காரணமாக இருக்கிறார்கள். 63 ஆண்டுகள் என்னை வாழ வைத்தது இந்த சினிமா தான்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல், "தென் இந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வையும் தற்போது திரும்பி உள்ளது. எல்லாருடைய ஒளியும் அந்த பக்கமாக திரும்பி விட்டது என வட இந்தியாவில் பயப்படுகிறார்கள். புதிதாக வரக் கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாத விஷயத்தினை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்" என கூறினார்.
அதே போல, நல்ல சினிமாக்களை மக்கள் ஒரு போதும் கைவிடக் கூடாது என்றும், ஒரு வெற்றியை அனைவரும் கொண்டாடுவது தான் சிறந்த திரைப்படங்களை உருவாக்க உத்வேகமாக அமையும் என்றும் கமல் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!