தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் தான் சூரி.இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பாண்டிய நாடு, ஜில்லா என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது என்பதும் முக்கியமாகும்.இது தவிர அம்மன் என்ற உணவகத்தையும் நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் இவரின் அம்மன் உணவகத்தில் சில தினங்களுக்கு முன்பு வணிகவரித்துறை சோதனையில் ஈடுப்பட்டனர். மதுரை அருகே ஒத்தக்கடையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் போலி பத்திரம் ரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. யாரெல்லாம் நிலத்தை பறிகொடுத்துள்ளார்களோ, அவர்கள் அதிகாரிகளிடம் மனுவாக அளித்து தன்னுடைய நிலங்களை மீட்டுக் கொள்ளலாம். வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித் துறை மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வருவாயும் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ.8300 கோடி வருவாயும் என மொத்தம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
நடிகர் சூரி எனது தொகுதிக்காரர் என்னுடைய நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையிடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.
யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளவில்லை. வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு. என இவ்வாறு அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!