கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரிமுத்து. பிரசன்னா, உதயதாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதனையடுத்து பல வருடங்கள் அமைதியாக இருந்த அவர் இரண்டாவது படமாக விமல், அனன்யா, பிரசன்னா உள்ளிட்டோரை வைத்து புலிவால் படத்தை இயக்கினார்.
தொடர்ந்து நடிகராக அறிமுகமாகினார். அதன்படி கேரக்டர் ரோல், வில்லன் ரோல், ஹீரோவுக்கு அப்பா ரோல் என பல கதாபாத்திரங்களை ஏறற்று நடித்து வந்தார். இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இது தவிர கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார். அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியிருக்கிறார். அவர் ஏற்றிருந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்காகவே இளைஞர்களும் எதிர்நீச்சல் சீரியலை பார்க்க ஆரம்பித்தனர்.
மாரிமுத்து இறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் இறப்பது போன்று காட்சி எடுக்கப்பட்டு அதற்காக இறுதி அஞ்சலி போஸ்டரும் ஒட்டப்பட்டது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் அந்தக் காட்சி குறித்தும் மாரிமுத்து குறித்து நடிகரும், ஆர்.ஜேவுமான விக்னேஷ் பேசியிருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அந்த இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட படத்தில் அவருடன் நானும் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது பாடையில் படுப்பதாகட்டும், இறந்தவர்களுக்கு செய்யும் சடங்காகட்டும் அனைத்துக்கும் இவர் போய் போய் படுத்து எழுந்து வந்தார். நான் ஒருமுறை அண்ணே என்ன எல்லாத்துக்கும் போறீங்க. உண்மையான சுடுகாடு வேற இது. ஏன் அண்ணே இப்படி பண்றீங்க என்று கேட்டேன். அதற்கு அவரோ, அட தம்பி இப்படி எல்லாம் பண்ணா நான் என்ன உண்மையாவே செத்தா போகப்போறேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி கூறினார்.
மேலும் என்னிடம் அவர், தம்பி இப்போதான் வாழ்க்கையே நல்லா இருக்கும். எல்லா நாளும் பிஸியா இருக்கேன். நைட் 9 மணி ஆனா போதும் மழை சாரல் மாதிரி சன் டிவி என்னை எல்லா வீட்டுக்குள்ளையும் தூறல் மாதிரி விழ செய்யுது. இப்போ எல்லா வீட்டுக்குள் நான் போயிட்டேன்ல. கொடுக்கமாட்டாங்க என நினைத்து ஒரு தொகையை சம்பளமாக கேட்டால் அதையும் தராங்க ப்பா என்று சிரித்தபடியே சொன்னார். அவர் கதை சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!