தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி பின்னர் “நான்” திரைப்படத்திலிருந்து நடிகராகவும் நடிக்க தொடங்கினார். அடுத்தடுத்து தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என வெவ்வேறு அவதாரங்கள் எடுத்த விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
முன்னதாக மலேசியாவில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது படகில் ஏற்பட்ட ஒரு மோசமான விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனிக்கு முகத்தில் மிக மோசமான எலும்பு முறிவுகளும் காயங்களும் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து வந்திருக்கும் விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை மற்றும் திரை பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்திற்கு முன்பாக தனது 20 வயதில் ஏற்பட்ட ஒரு மோசமான விபத்து குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில்,
“எனக்கு உண்மையில் 20 வயதிலேயே ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. இதே மாதிரி தான். எனக்கு என்ன என்று தெரியவில்லை முகத்திலேயே விழுகிறது. 20 வயதில் பைக்கில் சென்ற போது கீழே விழுந்து இருக்கிறேன். விழும் போது ஒரு பெரிய கல் வந்து முகத்தில் வலது கண்ணை சுற்றி அடித்தது. அந்த இடத்தில் மட்டும் எனக்கு ஐந்து எலும்பு முறிவு. இந்த எலும்பு முறிவு இப்போது கூட எப்படி தெரியும் என்றால், உதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது தெரியாது.
இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்கும் போது தூக்கம் இல்லாமல் இருக்கும் போது முகம் கொஞ்சம் கோணும்... யாராவது பார்த்தால் என்ன வித்தியாசமாக இருக்கிறீர்கள் என கேட்பார்கள். தூக்கம் இல்லாமல் இருந்தால் அப்படி ஆகிவிடும். இந்த சமயத்தில் மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், “நீங்கள் பைக் ஓட்டக்கூடாது எந்த நேரத்திலும் உங்களுக்கு வலிப்பு வரலாம் கம்ப்யூட்டர் பார்க்காதீர்கள் பைக் ஓட்டாதீர்கள் வலிப்பு வரலாம்” என சொன்னார்கள். “வசதி இருந்தால் கார் பயன்படுத்துங்கள்” என்றார்கள். நான் ஒரு சாதாரண சம்பளம் தான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். காரில் போங்க என சொன்னதனால் வேறு வழியில்லாமல் கார் வாங்கினேன் லோன் போட்டு... அதன் பிறகு தான் இன்னும் கடினமாக உழைக்க ஆரம்பித்தேன். ஏன் என்று தெரியவில்லை.
அதன் பிறகு நிறைய படித்தேன், நிறைய வேலை செய்தேன், இசையமைப்பாளர் ஆனேன், சொந்தமாக ஸ்டுடியோ கட்டினேன். அதனால் அந்த விபத்துக்கு பிறகு நான் மிகவும் பாசிட்டிவாக இருந்தேன். இப்போதும் அப்படித்தான் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறேன். ஏன் என்று தெரியவில்லை விபத்திற்கு பிறகு ஒரு சிறிய சோர்வு இருக்கும் இல்லையா? ஒரு கவலை இருக்கும் இல்லையா? அது எதுவுமே இல்லை விபத்திற்கு பிறகு மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் நன்றாக இருக்கிறேன்.” என கூறியுள்ளார் .
Listen News!