எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புதிமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது.
இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது.இரண்டு பாகங்கள் கொண்ட இந்தப் படத்தை 150 நாட்களில் படமாக்கி இயக்குநர் மணிரத்னம் ஆச்சரியமளித்தார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது இரண்டாம் பாகத்தின் டப்பிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் இயக்குநர் மணிரத்னம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் உருவாக்கியுள்ளதாக சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
Listen News!