எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம்.
அவருக்கு லைகா துணை நிற்க படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உலக தமிழர்கள் அனைவரிடமும் எழுந்தது.
ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படமாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாககும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படமானது நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்தனர்.
படத்தை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு ஓரளவு டீசண்ட்டான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதேசமயம் முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை மணிரத்னம் இதில் போக்கியிருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அப்படி பேசுபவர்கள் பாகுபலியோடு படத்தை ஒப்பிடுவதால் வரும் கருத்து எனவும் ஒருதரப்பினர் சொல்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஐஸ்வர் ராய், மகள் ஆராத்யா, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோருடன் நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் பார்த்தார். அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் 2 படம் அருமை, விவரிக்க வார்த்தையே இல்லை. மணிரத்னம் சார், சியான், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் மொத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என் திருமதியை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. அவரின் சிறந்த நடிப்பு இதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் சூழலில் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
Listen News!