இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இதில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா சரண்,அஜய்தேவ் கன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்.ஆயிரம் கோடியை வசூலித்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல், கடந்த ஜனவரி 11ஆம் தேதி சிறந்த திரை இசைப் பாடலுக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது.
நாட்டு நாட்டு குத்து பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றதை அடுத்து, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், நாட்டு நாட்டு குத்து பாடல் இசையை நீங்கள் வித்தியாசமாக கையாண்டிருப்பதாகவும், இசையை அற்புதமாக கையாண்டதற்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் படம் இயக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நாம் பேசலாம் எனவும் ராஜமெளலியிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஹாலிவுட் படங்களின் ஜாம்பவனாக திகழும் ஜேம்ஸ் கேமரூன், ராஜமெளலிக்கு அழைப்பு விடுத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்,சர்ச்சையின் நாயகனான இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கே ஆசிப், ரமேஷ் சிப்பி, ஆதித்யா சோப்ரா, கரண் ஜோஹர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்றவர்களை ராஜமௌலி பின்னுக்கு தள்ளி முந்திவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும், ராஜமௌலி சார் தயவு செய்து உங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் இந்தியாவில் ஏராளமான திரைப்பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பொறாமையால் உங்களைக் கொல்ல ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதில், நானும் ஒருவர். இப்போது நான் குடித்து இருப்பதால், இந்த ரகசியத்தை வெளியில் சொல்கிறேன் என்று ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக இருந்த ராம் கோபால் வர்மா, சினிமா குறித்தோ,அரசியல் குறித்தோ அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்வதை வழக்கமாகவே வைத்துள்ளார். தற்போது, 'ஆர்ஆர்ஆர்' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிரான கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரித்ததை அடுத்து அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!