சந்திரமுகி திரைப்பட படப்பிடிப்பின் போது ரஜினிகாந்தை பார்த்த போது அவர் என்னை பார்த்து என்னுடன் நடிக்க மாட்டேன் என சொன்ன ஒரே ஆர்டிஸ்ட் நீ தான் என கூறி கலாட்டா செய்ததாக நடிகை ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயஸ்ரீ தென்றலே என்னை தொடு எனும் படத்தில் மோகனுடன் நடித்திருந்தார். 1988 ஆம் ஆண்டு திருமணமானதும் அவர் அமெரிக்கா போய்விட்டார். அவருடைய பாட்டி ஜெயலட்சுமி பாடகி மற்றும் நடிகை. சிவகவி படத்தில் தியாகராஜ பாகவதருடன் நடித்துள்ளார்.
ஜெயஸ்ரீ ஒரு வங்கி ஊழியரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள். எனினும் இந்த நிலையில் மணல்கயிறு 2 மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ஜெயஸ்ரீ தனது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து நடிகை ஜெயஸ்ரீ கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது 1985 ஆம் ஆண்டு தென்றலே என்னை தொடு என்னும் படத்தில் ஸ்ரீதர் சார் என்னை அறிமுகப்படுத்தினார். முதலில் நான் நடிக்க தயங்கினேன். கல்லூரி மூன்றாமாண்டு என்பதால் வருங்காலத்தை பற்றி நினைத்தேன்.
அப்போதுதான் எனது பெற்றோர், இயக்குநர், மோகன் உள்ளிட்டோர் எனக்கு ஊக்கம் கொடுத்து நடிக்கவைத்தனர். அதன் பின்னர் அந்த சூழல் எனக்கு பிடித்துவிட்டதால் நடிக்கத் தொடர்ந்தேன். எனக்கு நடப்பதற்கும் நிற்பதற்கும் கூட ஸ்ரீதர் சார்தான் கற்றுக் கொடுத்தார். இன்று வரை போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும் அப்படித்தான் நிற்பேன்.
அந்த படத்தில் நீச்சல் உடை இருப்பது, முத்தக்காட்சி, கட்டி பிடிப்பது உள்ளிட்டவற்றை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் நடிக்க அழைத்தார்கள். அத்தோடு நீச்சல் தெரியாததால் அதை ஒரு 10 நாட்கள் கற்றுக் கொண்டேன். புன்னகை மன்னன் படத்தில் நான் நடிக்க வேண்டியதுதான். அதில் முத்தக் காட்சி இருப்பதால் நான் நடிக்க மாட்டேன் என சொல்லவில்லை.
நான் ஒரு ஷோவிற்காக லண்டன் செல்ல இருந்தேன். என்னால் அந்த கலைவிழாவை தள்ளி போட முடியவில்லை, கலந்து கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. அதனால் நான் கமல் சாருடன் நடிக்கும்வாய்ப்பை இழந்தேன். அப்போதெல்லாம் ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்போம். சிவக்குமார் சாருடன் இன்னமும் நான் தொடர்பில் இருக்கிறேன். சினிமாவில் நடிக்கும் போது நிறைய நுணுக்கங்களை சொல்லி தருவார்.
அவருடன் ஒரு வாரம் ஒரு குறும்படத்தில் நடித்தாலே போதும் நடிப்பையே கற்றுக் கொள்ளலாம். நடிகர் ரஜினியின் சந்திரமுகி படத்தின் செட்டிற்கு சென்றேன். அப்போது அவர் "என்னுடன் நடிக்க மாட்டேன் என சொன்ன ஒரே ஒரு ஆர்ட்டிஸ்ட் நீ தான்" என்றார். அத்தோடு நான் அவருடன் நடிக்க மாட்டேன் என சொல்லவில்லை. என் திருமணம் நிச்சயமானதால் நடிக்க முடியவில்லை. கமல்ஹாசனுடைய அக்காவும் எனது பெரியம்மாவும் நெருங்கிய தோழிகள். ஆனால் சில காலம் இது கமலுக்கு தெரியாது.
நடிகர் மோகனுக்கு நிறைய விசிறிகள் இருப்பார்கள். இவர் காரை சூழ்ந்து கொள்வார்கள். எனினும் அப்போது அவரே நகருங்கள்மா, நான் போக வேண்டும் என மிகவும் அன்பாக கூறுவார். எனக்கு முரளியின் மரணம் மிகவும் பாதித்தது. காலமெல்லாம் உன் மடியில் என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன். அந்த படம் நீண்ட காலமாக எடுத்தார்கள். அப்போது அவருக்கு திருமணம் நிச்சயமானது, குழந்தை பிறந்தது என அனைத்தையும் எங்களிடம் சொன்னார். அதன் பிறகு நான் அமெரிக்கா போய்விட்டேன். அத்தோடு நிறைய ஹிட் படங்களை கொடுத்த அவர் மிகவும் சிறிய வயதிலேயே இறந்தது என்னை பாதித்தது. இனி மேல் என்னை சீரியல்களில் பார்க்கலாம். இவ்வாறு ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
Listen News!